வயது வித்தியாசம் பார்க்காமல் நம் எல்லோருக்குள்ளும் "சாகசங்கள் மீதான ஒரு ஆசை" இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் "ஏதோவொரு வகையான அச்சம்" நம் ஆசைகளை புறந்தள்ளி நம்மை எப்போதுமே ஒரு பாதுகாப்பான வட்டத்துக்குள்ளேயே இருக்க செய்கிறது. சாகசங்களை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்துக்கொள்ள வேண்டும்; முயற்சியெல்லாம் செய்து பார்த்திட கூடாது என்கிற மனநிலையிலேயே நம்மை வைத்து கொள்கிறது.
எடுத்துக்காட்டிற்கு, சிலருக்கு கடலில் நீச்சல் அடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; ஆனால் கடைசிவரை கரையில் அமர்ந்து மணல்வீடு கட்டுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். ஏனெனில் "நன்கு நீச்சல் தெரிந்தவர்களை கூட, அவ்வளவு ஏன்? சில நேரங்களில் கடலோடு உறவாடி உயிர்வாழும் மீனவர்களை கூட, கடல் பலி வாங்கி இருக்கிறது. நாமெல்லாம் எம்மாத்திரம்?" என்கிற அச்சம் அவர்களது ஆசையை நசுக்கி விடும். இந்த வரிசையில் - இந்த பட்டியலில் ரோலர்கோஸ்டர் சவாரிகளுக்கும் ஒரு தனி இடம் உண்டு!
உண்மையிலேயே ஆபத்தான, கணிக்க முடியாத, கட்டுக்கடங்காத கடலுடன் ஒப்பிடும் போது ரோலர்கோஸ்டர் எல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை. ஆனாலும் கூட நம்மில் பலருக்கும் ரோலர்கோஸ்டரில் சவாரி செய்ய வேண்டும் என்பது இன்னமும் நிறைவேறாத ஓரு ஆசையாகவே இருக்கும்; காரணம் - அச்சம்; பலவகையான ரோலர்கோஸ்டர் விபத்துகளை செய்திகளாகவும், கதைகளாகவும் கேட்டதன் விளைவாக உருவான அச்சம்!
அப்படியான அச்சம் ஒரு பக்கம் இருக்க, ரோலர்கோஸ்டரில் சவாரி செய்ய வேண்டும் என்கிற ஆசை இன்னமும் உங்களுக்குள் இருக்கிறது என்றால், சமீபத்தில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கரோவிண்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த - அடிவயிற்றை கலக்கும் - சம்பவத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது!
குறிப்பிட்ட தீம் பார்க்கில் இருக்கும் ரோலர்கோஸ்டரில் சவாரி செய்த ரைடர்கள், 45 நிமிடங்களுக்கு, தலைகீழாய் தொங்கியபடி, தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரோலர் கோஸ்டர் சவாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது மற்றும் அதில் இருந்த ரைடர்கள் 45 நிமிடங்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.
Also Read : இருக்கு... ஆனா இல்ல! 30 நொடிகளில் மறைந்து போகும் நாணயம்..
'ஃப்ளையிங் கோப்ரா' என்று பெயரிடப்பட்ட அந்த ரோலர்கோஸ்டர் ஆனது 50 மைல் வேகத்தில் 360 டிகிரி கோண லூப் வழியாக ரைடர்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த ரோலர் கோஸ்டர் ஆனது ஒரு சவாரி முடிவதற்குள் அதிலுள்ள ரைடர்களை ஆறு முறை தலைகீழாக புரட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஃப்ளையிங் கோப்ராவில் 'ரைட்' சென்றவர்கள் தான் 45 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கரோவிண்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்கா ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் ரைடர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மெயின்டெனன்ஸ் டீம் விரைவாக செயல்பட்டதாக கூறியுள்ளது.
Also Read : மேடம் கொஞ்சம் இங்க பாருங்க என்ற போட்டோகிராபருக்கு மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி - வைரல் வீடியோ
நினைவூட்டும் வண்ணம், கடந்த 2019 ஆம் ஆண்டில், 'தி ஸ்மைலர்' என்கிற ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தவர்களுக்கும் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் போது அதில் சவாரி செய்தவர்கள் 100 அடி உயரத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, அந்த சம்பவத்தின் போதும் கூட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video