நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என்றும், தற்போதைய வயதில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இளமையாக தெரிய வேண்டும் என்றும் பெரும்பாலும் ஒவ்வொரு மனிதருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். இதற்காக பலர் ஆயுர்வேத பழக்க, வழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். ஒருசிலர் ரசாயனம் கலந்த மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை இளமையாக காண்பித்து கொள்கின்றனர்.
ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என்றென்றும் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரை தினந்தோறும் பருகி வருகிறாராம்!! ஆச்சரியமாக இருக்கிறதா? இப்படி செய்வதால், தன்னுடைய தோற்றம் 10 ஆண்டுகள் இளமையாக தென்படுகிறது என கூறுகிறார் அவர். அவர் கூறும் பெருமை இதோடு நிற்கவில்லை. இன்னும் இருக்கிறது.
மனக்கவலையை போக்குகிறதாம் :
இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி மடாதீன் என்பவர் தான் இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். தினசரி சிறுநீர் அருந்துவதன் மூலமாக தனது மனக்கவலை பெருமளவிற்கு தீர்ந்துள்ளதாக கூறுகிறார் அவர்.
மன ரீதியான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு சிறுநீர் அருந்தும் பழக்கத்தை ஹாரி மடாதீன் தொடங்கினார் என்று ‘நியூயார்க் போஸ்ட்’ ஊடகம் தெரிவிக்கிறது. மனதில் அமைதி, சாந்தம் மற்றும் உறுதி ஏற்படுவதற்கு இது உதவிகரமாக இருக்கிறதாம்.
மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது
சிறுநீர் அருந்துவதன் மூலமாக தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஹாரி மடாதீன் விவரித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் முதன் முதலாக சிறுநீர் அருந்தியபோது என் கற்பனைக்கும் மேலான சக்தி கிடைத்ததை உணர முடிந்தது. சிறுநீர் அருந்திய உடனேயே எனது மூளை வேலை செய்ய தொடங்கி விடுகிறது. இதனால், மன அழுத்தம் குறைகிறது. அமைதி, சாந்தம் மற்றும் உறுதி ஆகியவற்றை உணர முடிகிறது. எப்போதும் என்னை மகிழ்ச்சி நிலையில் வைத்துக் கொள்ள இது உதவுகிறது’’ என்றார் அவர்.
தினசரி 200 மில்லி
தினசரி 200 மில்லி அளவுக்கு தன்னுடைய சிறுநீரை ஹாரி மடாதீன் அருந்தி வருகிறாராம். குறிப்பாக, ஒரு மாதம் பாதுகாக்கப்பட்ட சிறுநீர் மற்றும் புதிதாக எடுக்கப்பட்ட சிறுநீர் ஆகிய இரண்டையும் கலந்து அருந்துவாராம். இது மட்டுமல்லாமல் சிறுநீரின் மனம் மற்றும் சுவை ஆகியவை இவருக்கு பிடித்திருக்கிறதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது சருமம் இளமையாக காட்சியளிக்கிறது. பளபளப்பாகவும், சாஃப்ட்டாகவும் இருக்கிறது. இன்றைய நாள் வரையிலும் சிறுநீர் தான் சிறந்த உணவுப் பொருளாக உள்ளது. வேறெந்த சரும பாதுகாப்பு பொருளையும் நான் பயன்படுத்துவதில்லை’’ என்றார். ஹாரியின் நண்பர்கள் சிலரும் இந்த சிறுநீர் மருந்து சிகிச்சையை இவரது ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்கிறார்களாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.