மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு வழங்க மறுத்த ரெலிகேர் நிறுவனத்திற்கு எதிராக பெங்களூரைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய புற்றுநோய் நோயாளி ஒருவர் வழக்கு தொடுத்து, அதன் மூலமாக ரூ.6.7 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார். முன்னதாக, ரெலிகேர் நிறுவனத்தில் இவர் காப்பீடு பாலிசி ஒன்றை எடுத்திருந்தார். அந்த சமயத்தில் தனக்கு நீரிழிவு குறைபாடு மற்றும் ஹைப்பர்டென்சன் போன்ற பிரச்சினைகள் இருப்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் அடிப்படையில் அவருக்கு காப்பீடு வழங்க முடியாது என்று ரெலிகேர் நிறுவனம் தெரிவித்துவிட்டது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
காப்பீடு வழங்க மறுத்த ரெலிகேர் நிறுவனத்திற்கு எதிராக பாலிசிதாரர் வழக்கு தொடுத்தார். இதுகுறித்து கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, ரெலிகேர் நிறுவனம் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.
நீரிழிவு நோய், ஹைப்பர்டென்சன் போன்றவை சாதாரணமாக உடல் சார்ந்த குறைபாடுகள் தான் என்றும், அவற்றின் அடிப்படையில் மருத்துவக் காப்பீட்டை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ப்ரீமியம் பணத்தை உரிய காலத்தில் சரியாக செலுத்திய பாலிசிதாரரின் மருத்துவ சிகிச்சை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்க உத்தரவு : பாதிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் 12 சதவீத வட்டி ஆகியவற்றுடன், காப்பீடு மறுத்ததால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.1.1 லட்சம் இழப்பீடு மற்றும் நீதிமன்ற செலவுகளுக்காக ரூ.10,000 ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று ரெலிகேர் நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read :
ஒரே ஒரு சிப்ஸ் ரூ1.63 லட்சமாம்.. இ-பே தளத்தில் வலம் வரும் விநோத விளம்பரம்!
2021இல் பாலிசி எடுக்கப்பட்டது : முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ரெலிகேர் நிறுவனத்தில் பாலிசிதாரர் தங்கள் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டு பாலிசி ஒன்றை எடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி ப்ரீமியம் செலுத்தி பாலிசியை அவர் புதுப்பித்து வந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஹெச்சிஜி மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சையின் முடிவில் அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.11 லட்சத்திற்கான ரசீதுகளை வழங்கியது. இதை வைத்து, காப்பீடு பணம் தருமாறு ரெலிகேர் நிறுவனத்தை பாலிசிதாரர் அணுகினார். காப்பீடு செய்யப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான தொகையை செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கிளைம் தர மறுத்த நிறுவனம் : மருத்துவக் காப்பீடு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நோயாளிக்கு ரெலிகேர் நிறுவனம் அளித்த பதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதாவது, நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற பிரச்சினைகள் இருப்பதை பாலிசி எடுக்கும்போது அவர் கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டி காப்பீடு மறுக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது, நீரிழிவு மற்றும் ஹைப்பர்டென்சன் ஆகியவை நோய்கள் அல்ல என்றும், அதன் அடிப்படையில் காப்பீடு மறுக்கக் கூடாது என்றும் எண்ணற்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, இழப்பீடு வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.