இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக தொழிலதிபர் ரத்தன் டாடா கருதப்படுகிறார். டாடா குழுமத்தின் சேர்மனாக உள்ள ரத்தன் டாடா வர்த்தகம் ரீதியாக பலருக்கும் முன்னுதாரமான உள்ள அதேவேளையில், அவரது எளிமையான பண்பும் பலரையும் கவர்ந்தது.
கார் என்றாலே அது வசதியானவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் நிலவிய சூழலில், டாடா நேனோ(TATA NANO) என்ற காரை ஒரு லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தி ஆட்டோமொபைல் துறையில் புதிய புரட்சியையே டாடா நிறுவனம் ஏற்படுத்தியது. இதன் காரணகர்த்தாவாக விளங்கியவர் ரத்தன் டாடா. வர்த்தக ரீதியாக நேனோ கார் மற்ற கார்கள் அளவுக்கு போட்டிபோட முடியாவிட்டாலும், பாமர மக்களுக்கான கார் என இன்றளவும் நேனோ புகழப்பட்டு வருகிறது.
நேனோ கார் உருவாக்கம் தொடர்பாக அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாடா ஒரு தகவலை வெளியிட்டிருந்தார், அதில், இந்திய குடும்பங்கள் ஸ்கூட்டரில் செல்வதும், ஸ்கூட்டரில் தாய்க்கும் தந்தைக்கும் நடுவே பிள்ளைகள் சிக்கிக்கொண்டிருப்பதும்தான் நானோவுக்கான ஆசையை தூண்டியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மும்பை தாஜ் ஹோட்டலுக்கு ரத்தன் டாடா அண்மையில் சென்ற வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. காரணம், ரத்தன் டாடா தனது பாதுகாப்புக்கு கூட பார்டிகார்ட்ஸ் இல்லாமல் டாடா நேனோ காரில் வந்ததுதான். அவருடன் அவரது உதவியாளர் ஷாந்தனு மட்டுமே இருந்தார். மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா நினைத்திருந்தால் எத்தகைய ஆடம்பர காரிலேயே பயணிக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்ததோ தனது கனவு காரான நேனோவைதான்.
மேலும் படிக்க: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம்
அவரது இந்த எளிமை குறித்து பலரும் சமூகவலை தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடா தற்போது பயன்படுத்தும் இந்த எலக்ட்ரிக் நேனோ கார் எலக்ட்ரா EV என்ற நிறுவனம் அவருக்கு பரிசாக அளித்தது ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.