• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தொடரும் பாசன நீர் திருட்டை தடுக்க ’மாஸ்’ பிளானுடன் களமிறங்கிய ராஜஸ்தான் போலீஸ்!

தொடரும் பாசன நீர் திருட்டை தடுக்க ’மாஸ்’ பிளானுடன் களமிறங்கிய ராஜஸ்தான் போலீஸ்!

நீர் திருட்டை தடுக்க கொண்டுவரப்படும் புதிய காவல் நிலையம் சிஐஐ தலைமையில் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  • Share this:
கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் தண்ணீர் திருட்டைத் தடுக்க ஒரு சிறப்பு காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அப்பகுதியில் இயங்கும் இந்திரா காந்தி கால்வாய் வழியாக பாயும் பாசன நீர் திருடப்படுவதை தடுக்க ராஜஸ்தான் அரசு இந்த தனித்துவமான காவல் நிலையத்தைத் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி பதிவாகும் நீர் திருட்டு வழக்குகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க 60 போலீஸ் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நீர் திருட்டை தடுக்க கொண்டுவரப்படும் புதிய காவல் நிலையம் சிஐஐ தலைமையில் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த காவல் நிலையத்தில் 5 துணை ஆய்வாளர்கள், 8 தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் 40 கான்ஸ்டபிள்கள் பணியாற்றுவார்கள் என்று நோஹர் எம்எல்ஏ அமித் சாச்சன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “செல்வாக்கு மிக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் விவசாயிகள் தண்ணீரை சட்டவிரோதமாக எடுத்துச் செல்கின்றனர். அவர்களின் சுயநலத்திற்காக மற்ற விவசாயிகளை கஷ்டப்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தண்ணீர் திருட்டைத் தடுக்க முதல் முறையாக ஒரு காவல் நிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சமீபத்தில், அம்மாநிலத்தில் 12 புதிய காவல் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் இந்த தனித்துவமான காவல் நிலையமும் ஒன்றாகும். கடந்த நான்கு ஆண்டுகளில், ஹனுமன்கர் மாவட்டத்தில் மட்டும் 74 தண்ணீர் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளில் 28 வழக்கு பிரானி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘சக்பண்டி’ எனும் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாததால் நோஹர் மற்றும் பத்ரா விதானசபா பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகம் ஏற்படுவதாக ஹனுமன்கர் பகுதி கூடுதல் எஸ்.பி. ஜஸ்ஸரம் போஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஹரியானாவைச் சேர்ந்த ஒரு சிலர் இங்குள்ள வால் பகுதிகளில் நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும் தண்ணீரைத் திருடுகிறார்கள். தண்ணீர் திருடும் நபர்கள் ஐபிசி பிரிவு 397-ன் கீழ் பதிவு செய்யப்படுவார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீகங்கநகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களிலிருந்தும் நீர் திருட்டு வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. இத்தகைய தொடர் சூழ்நிலை, எதிர்காலத்தில் இதுபோன்ற காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதேபோல கால்வாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் காவல்துறையை நிறுவ வேண்டும் என்று கால்வாய் துறையும் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்வாயில் ஒரு நீண்ட குழாய் செருகப்பட்டு, வயலுக்குள் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திரா காந்தி கால்வாய் இந்தியாவின் மிக நீளமான கால்வாய் ஆகும். இது பார்ஸ்தர், பிகானேர், சுரு, ஹனுமன்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர் மற்றும் ஸ்ரீகங்கநகர் உள்ளிட்ட ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. சுமார் 650 கி.மீ. நீளமுள்ள இந்த கால்வாய், பஞ்சாபில் உள்ள ஹாரிக் பேரேஜிலிருந்து தொடங்கி ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் நீர்ப்பாசன வசதிகளுடன் முடிவடைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: