கடலில் மிதந்து வந்த பாட்டிலில் கடிதம் - என்ன எழுதியிருந்தது தெரியுமா ?

கடலில் மிதந்து வந்த பாட்டிலில் கடிதம்

சினிமா பாணியில் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

  • Share this:
போர்த்துகீஸை சேர்ந்த 17 வயதான இளைஞர் கிரிஸ்டியன் சான்டோஸ் என்பவர் தனது உறவினருடன் மீன் பிடிப்பதற்காக ஏஸோர்ஸ் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது பாட்டில் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அதில் ஒரு பேப்பர் இருந்துள்ளது. அதில் ஆரஞ்சு வண்ண பேனாவினால் குறிப்பு ஒன்று எழுதப்பட்டிருந்தது. இது அவருக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

பாட்டிலை சரி செய்து அதில் உள்ள பேப்பரை வெளியே எடுத்திருக்கிறார். அதில் உள்ள குறிப்பைக் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ரோட் இஸ்லேண்டில் ஒரு சிறுவன் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் குறிப்பில் ''நான் வெர்மோண்ட்சை சேர்ந்தவன். எனக்கு 13 வயதாகிறது. இந்தக் குறிப்பை கண்டுபிடித்தீர்கள் என்றால் messageinabottle2018@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தகவல் அனுப்புங்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொண்ட கிரஸ்டியனின் அம்மா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவங்களை விவரித்து, அந்த பேப்பரையும் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் அந்த மெயில் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், எதிர் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை என்றும் அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது ஃபாலோயர்களிடம், ''உங்கள் நண்பர்கள் யாராவது வெர்மோண்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். அவர்களுக்கு அந்த சிறுவனை தெரிய வாய்ப்பிருக்கிறது'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பாட்டில் ரோட் இஸ்லாண்ட்டில் இருந்து சுமார் 2400 மைல்கள் கடந்து ஏசோருக்கு வந்து கிரிஸ்டியனிடம் வந்து சேர்ந்துள்ளது. இதனையடுத்து கிரிஸ்டியன், அந்தக் குறிப்பை எழுதிய சிறுவனை பார்க்க வேண்டும் எனவும், தான் அந்த பாட்டிலை கண்டுபிடித்ததாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2018ல் அந்த குறிப்பை எழுதிய சிறுவனுக்கு 13 வயதென்றால் தற்போது அவனுக்கு 16 அல்லது 17 வயதாகியிருக்கும். எனவே கிரிஸ்டியனிற்கும், குறிப்பை எழுதிய சிறுவனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் சந்தித்துக்கொண்டால் , இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

முற்றிலும் சினிமா பாணியில் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நம் ஊர்களில் ரூபாய் நோட்டில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் நம் பெயரை எழுதி அதனை கைமாற்றி விடுவோம். அந்த ரூபாய் என்றாவது ஒரு நம் கைகளிலோ, நாம் விரும்புபவர்களின் கைகளிலோ வந்தடையும் என்ற எண்ணத்தில் அப்படி செய்வோம். அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும் அப்படி செய்வதில் ஒரு அலாதி ஆனந்தம் உருவாகும். தமிழில் காதல்கோட்டை படத்தில் தேவையானி தனது ஹேண்ட் பேக்கை தொலைக்க, அது அஜித்தின் கைகளில் கிடைக்கும். இருவரும் கடிதம் மூலம் தங்கள் அன்பைப் பறிமாறிக்கொள்வார்கள். ஆனால் அது கற்பனைக் கதை. ஆனால் நிஜத்திலும் இதுபோல் நடந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: