Driving Stunt: அமெரிக்காவில், பின் சீட்டில் உட்கார்ந்து கார் ஓட்டிய ’இந்திய வம்சாவளி’ இளைஞர் கைது

கோப்புப் படம்

விலை உயர்ந்த அந்தக் காரில் சென்சார் மற்றும் ஆட்டோ பைலட் வசதிகள் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெஸ்லா நிறுவனத்தின் காரை பின் இருக்கையில் அமர்ந்து இயக்கிய இந்தியா வம்சாவளி இளைஞரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் கலிஃபோர்னியா நகரில் டெஸ்லா காரை ஓட்டிச் சென்றுள்ளார். விலை உயர்ந்த அந்தக் காரில் சென்சார் மற்றும் ஆட்டோ பைலட் வசதிகள் உள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி பின் இருக்கையில் அமர்ந்தவாறு டெஸ்லா காரை இயக்கலாம். ஆனால், அமெரிக்க காவல்துறை இதற்கு தடை விதித்துள்ளது. மிகப்பெரிய விபத்து மற்றும் உயிர்ச் சேதங்களுக்கு வழி வகுக்கும் என்பதால், எப்போதும் டிரைவர் சீட்டில் ஓட்டுநர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்மா பின் இருக்கையில் அமர்ந்தவாறு டெஸ்லா காரை இயக்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சாலையில் பயணிப்போர் இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அமெரிக்க போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதனடிப்படையில், புகாரை பதிவு செய்த காவல்துறையினர், கார் குறித்த தகவல்களை மேலும் பகிருமாறு கேட்டுகொண்டனர்.

ஷர்மாவும் தன்னுடைய கார் ஸ்டன்ட் டிரைவை, தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்க போக்குவரத்து காவல்துறை சர்மாவை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவதை தொடர்ந்து செய்தல், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்ததுல் ஆகிய பிரிவுகள் அவர் மீது பதியப்பட்டுள்ள முக்கிய வழக்குகள் ஆகும்.

Also read... ஆழ்கடலில் இரையை தேடிவந்த இராட்சத ஸ்க்விட்... முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட வைரல் காட்சிகள் வெளியீடு!

சர்மா ஏற்கனவே இதே மாடல் டெஸ்லா காரை, பின் இருக்கையில் அமர்ந்து ஓட்டியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் ஒருவார இடைவெளியில் மற்றொரு டெஸ்லா காரை வாங்கி மீண்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டபோது, தான் ஒரு பணக்காரர் என்றும், இப்படி தான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய லைப் ஸ்டைல் வேறுவிதமானது எனக் கூறியுள்ள ஷர்மா, அதனை மற்றவர்கள் புரிந்துகொள்ளாதது என் தவறில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மற்றொரு டெஸ்லா காரை உடனடியாக வாங்கும் வசதி இருப்பதால், மீண்டும் வாங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார். ஷர்மாவின் இந்த பதில் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணம் இருக்கும் அகம்பாவத்தில் அவர் இருப்பதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2015ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் டெஸ்லா காரை அறிமுகப்படுத்தியது. கடந்த 6 வருடங்களில் 9க்கும் மேற்பட்ட முறை மிகப்பெரிய விபத்துகளில் டெஸ்லா கார் சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விபத்துகளிலும் ஓட்டுநர்கள் தங்கள் இருக்கையில் அமராமல், பின் இருக்கையில் இருந்து ஆட்டோ பைலட் வசதியை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: