Home /News /trend /

பழுதான விமானத்தை இறங்கிவந்து தள்ளிய பயணிகள் - ஆச்சரியப்படுத்தும் ட்ரெண்டிங் வீடியோ

பழுதான விமானத்தை இறங்கிவந்து தள்ளிய பயணிகள் - ஆச்சரியப்படுத்தும் ட்ரெண்டிங் வீடியோ

Tara Air

Tara Air

விமான ஓடுதளத்தில் பழுதாகி நின்ற விமானத்தை பயணிகள் இறங்கிவந்து தள்ளிய வீடியோ ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சாலைகளில் பயணிப்போர் பழுதடைந்து நிற்கும் பைக், கார் போன்ற இலகுரக வாகனங்களையும் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களையும் தள்ளிச் செல்லும் காட்சிகளை நாம் பொதுவாக பார்த்திருக்க முடியும். பேருந்துகள் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டால், அதில் பயணித்த பயணிகளை நடத்துனர் அழைத்து பேருந்தை தள்ளச் செய்யும் சம்பவங்களை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் ஒரு விமானத்தை பயணிகள் தள்ளியதை பார்த்திருக்கிறீர்களா? இல்லை கேள்விதான் பட்டிருக்கிறீர்களா?

உண்மையில் விமானம் ஒன்று பழுதாகி ரன்வேயில் நின்றுவிட அதனை பயணிகள் இறங்கி வந்து தள்ளியிருக்கின்றனர். இது குறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



நேபாள நாட்டின் கோட்லி எனும் பகுதியில் அமைந்துள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில் திடீரென அந்த விமானத்தின் பின்புற டயர் ஒன்று வெடித்திருக்கிறது. டயர் வெடித்ததால் விமானமானது அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் ரன்வேயில் அப்படியே நின்றுவிட்டது.

இதற்கிடையே இந்த விமானம் ரன்வேயில் நின்றதால் அந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்த விமான நிலையத்தில் பழுதான விமானத்தை நகர்த்திச் செல்ல போதுமான உபகரணங்கள் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சேர்ந்து அந்த விமானத்தை அலேக்காக தள்ளத் தொடங்கினர்.



அதே விமானத்தில் இருந்த பயணிகளும் இறங்கிவந்து விமானத்தை ரன்வேயில் இருந்து தள்ள உதவினர். சுமார் 20 நபர்கள் சேர்ந்து அந்த விமானத்தை கஷ்டப்பட்டு தள்ளி பத்திரமாக ரன்வேயில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த விமானத்துக்கு வேறு டயர் மாற்றப்பட்டது, விமானத்தை பயணிகள் இறங்கி வந்து தள்ளிய வீடியோவை ஒருவர் ட்விட்டரில் பதிவிட அது தற்போது வைரலாக மாறியிருக்கிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதாகி நின்ற ரயில் பெட்டியை பொதுமக்கள், ஊழியர்கள் சேர்ந்து தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 
Published by:Arun
First published:

Tags: Nepal, Trending, Viral Video

அடுத்த செய்தி