உணவு என்பது வெறுமனே பசியைத் தீர்த்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல. உணவை பார்த்தவுடன் மனதை கவரும் வகையில் அழகாக சமைத்து பரிமாறுதல், பிரம்மாண்ட தயாரிப்புகள் என பல கலைகள் இதனுள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, வீட்டில் தினசரி நாம் உணவு சமைத்து சாப்பிடுகிறோம் என்றாலும் கூட கல்யாணம், காதுகுத்து என சென்று விட்டால், அங்கு பரிமாறப்படும் உணவை சாப்பிடுவதற்கு நம் மனம் அலைபாயும். காரணம், அங்கு சமைக்கப்படும் உணவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது என்பதுதான்.
அதே சமயம், உலக சாதனை முயற்சியாகவும் மாபெரும் அளவில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அப்படியொரு நிகழ்வு தான் பாலஸ்தீன நாட்டில் நிகழ்ந்துள்ளது. இங்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4,500 அரிசியை கொண்டு, ‘முஜ்ஜதாரா’ என்ற சைவ உணவை தயாரித்தனர். இந்த உணவில் பீன்ஸ், வறுத்த வெங்காயம் உள்ளிட்டவை இடம்பெற்றன. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக இந்த சமையல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாலஸ்தீன பாரம்பரிய நகரில் சமையல்…
சமையல் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக செய்வது என்று முடிவு செய்த பிறகு, அது நடைபெறும் இடமும் கூட சிறப்புக்குரியதாக இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்த நகரம் தான் ஜெரிகோ நகரம் ஆகும். இந்த நகரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், உலகின் தொன்மையான நகரில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. உணவை சமைக்கும் பணியில் சுமார் 20 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன சமையல் கலைச் சங்கத்தின் தலைவர் சமர் ஜோமா இதுகுறித்து கூறுகையில், “பாலஸ்தீனத்தின் தேசிய பாரம்பரியம் அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குறிப்பாக, மிக தொன்மை வாய்ந்த நகரமான ஜெரிகோ நகரில் தான் இதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த சமையலை செய்து முடிப்பதற்கு 7 மணி நேரம் ஆனது. மொத்தம் 7 கேஸ் சிலிண்டர்கள் இதற்கு தேவைப்பட்டன. சமைத்த உணவை, ஜெரிகோ நகரில் வசிக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தோம்’’ என்று கூறினார்.
Also Read : சாப்பிட்டதால் சாதனை படைத்த பிரிட்டன் பெண் - வைரல் வீடியோ!
உணவுகளை பிரம்மாண்டமாக தயாரித்து உலக சாதனைகளை செய்வது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இதேபோன்ற சாதனை செய்யப்பட்டது. அப்போது, உலகிலேயே மிக அதிக விலை கொண்ட பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து அசத்தினர். அதாவது இந்த சமையலுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களும் விலை உயர்ந்ததாக தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக, ஆர்கானிக் புல் சாப்பிட்டு வளர்ந்த ஏ2 பசுவின் பாலில் இருந்து கிரீம், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள் போன்றவை இந்த சமையலுக்கு பயன்படுத்தப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.