• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை - சென்னை பிரியாணி கடை விளம்பரம்!

வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை - சென்னை பிரியாணி கடை விளம்பரம்!

  • Share this:
வெங்காயம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி வரும் நிலையில், சென்னையில் உள்ள பிரியாணி கடை ஒன்று, "வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை" என்ற வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது.

வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பெரிய வெங்காயம் கிலோ 150 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய் வரையும் விற்பனையாகி வருகின்றது.

நேற்றைய தினம் பெரம்பலூரில் விவசாயி ஒருவர் விதைப்பதற்காக வைத்திருந்த 300 கிலோ வெங்காயம் திருட்டு போனதாக புகார் அளித்து இருந்தார்.

அதன் பின்னர், வெங்காயம் மிகவும் விலை உயர்ந்த ஒரு பொருளாக மாறி வருவதை கலாய்த்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், சென்னையில் தொப்பி வாப்பா என்கிற பிரியாணி கடை ஒரு வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அதில், "வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி (Gun Man) தேவை" என்று அந்த கடையினுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த கடையின் உரிமையாளர் ஓமர், அவர்களுடைய அனைத்து கடைகளுக்கும் சேர்த்து மொத்தமாக மாதம் ஒன்றிற்கு 1 1/2 டன் வெங்காயம் வாங்குவதாகவும், அதற்காக தற்போது உள்ள விலைப்படி 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவித்தார்.

இதனால், பிரியாணிக்கு கொடுக்கும் தயிர் வெங்காயத்தில், வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காய் உபயோகம் செய்வதாகவும், ஆனால், பிரியாணியில் வெங்காயம் தான் பயன்படுத்தி ஆக வேண்டும் என்றார்.

மடிப்பாக்கத்தில் உள்ள அவர்களது கிச்சனில் வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளியை பணியமர்த்த வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக அவருக்கு 8000 ரூபாய் முதல் 10000 வரை சம்பளம் தரவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், வெங்காயம் விலை ஏற்றம் வேதனையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: