வாடிக்கையாளர் புக்கிங் செய்த அடுத்த 10 நிமிடங்களில் அவர் இருக்கும் இடம் தேடி வருகின்றன ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி சேவைகள். எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு கட்டணம் தேவை என்றெல்லாம் நீங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. அனைத்தும் ஆன்லைன் வழியாக தீர்மானிக்கப்படுகிறது. டாக்ஸி எங்கும் கிடைக்கும் என்று தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லாமல், இருக்கும் இடத்திற்கு வரும் இந்த சேவைகள் மக்களுக்கு உதவிகரமாகத் தான் இருக்கின்றன.
ஆனாலும், அவ்வபோது தவிர்க்க முடியாத சில காரணங்களால் வாடிக்கையாளர்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படுவது உண்டு. அப்படியொரு நிகழ்வுதான் கர்நாடக மாநிலத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் ஓலா காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பாதி வழியில் நெடுஞ்சாலையில் இறக்கி விடப்பட்டு தவிக்க நேர்ந்தது குறித்து சமூக வலைதளத்தில் விவரித்திருக்கிறார் அவர்.
பெங்களூருவில் இருந்து மைசூருக்கு பயணம்
வாடிக்கையாளர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஓலா கார் புக்கிங் செய்தார். அதைத் தொடர்ந்து, அந்த காரில் அவரது குடும்பத்தினர் பயணம் செய்ய தொடங்கினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்திருந்த நிலையில், திடீரென்று நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் காரை வழி மறித்தனர்.
Also Read :
IRCTC ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்; புதிய புக்கிங் முறை இதோ!
காருக்காக எடுக்கப்பட்ட ஃபைனான்ஸ் கடனை திருப்பி வசூல் செய்வதற்கான ஏஜெண்ட்கள் என்று கூறிக் கொண்ட அவர்கள், காரில் இருந்து அனைவரையும் கீழே இறங்குமாறு வற்புறுத்தினர். முந்தைய தவணைத் தொகைகளை முறையாக திருப்பிச் செலுத்தாத ஓட்டுநரை (உரிமையாளர்) அவர்கள் மிரட்டத் தொடங்கியதோடு, காரையும் சிறைபிடித்தனர்.
வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார்
இதற்கிடையே, தங்கள் குடும்பத்தினரை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டதால் வாடிக்கையாளர் மிகுந்த தவிப்புக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் தொடர்பு கொண்டார். பலமுறை அவரது அழைப்பை ஹோல்ட் செய்து வைத்தனர். வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவராக அழைப்பை எடுத்து பேசிய போது, ஒவ்வொருவரும் முழு நிகழ்வையும் விவரிக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். ஏற்கனவே, பயணம் தடைபட்ட கோபத்தில் இருந்த வாடிக்கையாளருக்கு இது மேலும் எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்தது.
பயணத்தை கேன்சல் செய்ய அறிவுறுத்தல்
ஒருவழியாக வாடிக்கையாளர் முன்வைத்த புகாருக்கு சேவை மைய பிரதிநிதிகள் பதில் அளித்தனர். மாநகருக்கு வெளியே பயணம் மேற்கொண்டிருப்பதால், மாற்று கார் ஏற்பாடு செய்து தர இயலாது என்றும், தற்போதைய பயணத்தை ரத்து செய்து கொள்ளுமாறும் வாடிக்கையாளரிடம் அவர்கள் தெரிவித்தனர். இறுதியில் வேறு வழியின்றி வாடிக்கையாளர் தானே நிகழ்விடத்திற்கு நேரடியாக வாகனத்தில் சென்று, அவரது குடும்பத்தினரை அழைத்துச் சென்றார்.
கார் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற லொகேஷனை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு ஏஜெண்டுகள் வந்து தொந்தரவு செய்துள்ளனர் என்றும், இதற்கு ஓலா நிறுவனமே காரணம் என்றும் வாடிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.