கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகள்... கல்வி, இருப்பிடம் கொடுக்கும் NGO!

கோப்புப் படம்

உத்தரப்பிரதேச முக்கிய மந்திரி பால் விகாஸ் யோஜனா (UP Mukhya Mantri Bal Vikas Yojana) என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

  • Share this:
கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சகணக்கானோர் உயிரிழந்த நிலையில், பலர் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். குழந்தைகள் பலர் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்து நிற்கதியாக இருக்கின்றனர். ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக, அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் மற்றும் கல்வியைக் கொடுக்க லக்னோவைச் சேர்ந்த ‘த சிட்டி இன்டர்நேஷ்னல் ஸ்கூல்’ மற்றும் அந்த பள்ளிக்கு சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

முதல்கட்டமாக, பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த, ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் 346 குழந்தைகளை அந்த தொண்டு நிறுவனம் தேர்ந்தெடுத்து கல்வி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த அமைப்பின் நிறுவனரான சுனிதா காந்தி உத்தரப்பிரதேச மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இயக்குநரகத்தை அணுகி அனுமதி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச முக்கிய மந்திரி பால் விகாஸ் யோஜனா (UP Mukhya Mantri Bal Vikas Yojana) என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுனிதா காந்தி, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது மட்டுமின்றி, அவர்கள் தங்குவதற்கு ஏற்ப அனைத்து இருப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் விரும்பினால், அமைப்பின் இருப்பிடத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என விளக்கமளித்துள்ளார். ஒருவேளை இங்கு தங்கிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் ராஜ்கியா பால் கிரகாவில் (Rajkiya Bal Graha) தங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து அரசிடம் தெரிவித்தபோது அனைத்து உதவிகளையும் அரசு செய்துகொடுக்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததாக கூறியுள்ளார். குழந்தைகள் 18 வயது நிரம்பும் வரை நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளதாக சுனிதா காந்தி தெரிவித்துள்ளார்.

Also read... கோவிட்-19 நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனரா என தெரிந்து கொள்ளலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சுனிதா காந்தியின் முயற்சிக்கு உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் இயக்குநரகமும் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மனோஜ் ராய், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வி மற்றும் இருப்பிடம் கொடுக்கும் சுனிதா காந்தியின் சேவைக்கு, தாங்கள் நன்றி தெரிவிப்பதாக கூறினார். அவரது பாதுகாப்பின் கீழ் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், சுனிதா காந்தியைப்போல் மற்ற நல்ல உள்ளங்களும் இதுபோன்று செய்வதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: