ஊழியர் ஒருவர் தனது வேலையை விட்டு வெளியேறிய செய்தி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஏன் இருக்காது! ரூ.3.5 கோடி சம்பளம் உள்ள வேலையை தனக்கு சலித்து விட்டது என்று காரணம் கூறி நின்று விட்டால் ஏன் ஆச்சரியம் இருக்காது சொல்லுங்கள்..
இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது என்பதே மிகவும் கடினமான காரியமாகிவிட்டது. மேலும், கொரோனாவால் பலர் வேலை இழந்த நிலையில், குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தற்போதெல்லாம் பலர் தயாராக உள்ளனர். இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது என்றே கூறலாம். மக்களுக்கு விரைவான வேலை வாய்ப்புகள் கிடைக்காத இந்நிலையில், Netflixல் சௌகரியமாக கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர் தனது வேலையில் சலிப்படைந்ததால் அந்த வேலையை உதறியுள்ளார் என்ற செய்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இந்த செயலுக்கு கருத்துக்களை பதிவிட்டுள்ள நெட்டிசன்களில் பலர் அந்த நபரை முட்டாள் என்றும் கூறி பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். அவரது ஆண்டு சம்பளம் 4.50 லட்சம் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்புப்படி 3.5 கோடி. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா, ஆம் இது குறித்து லின் கூறுகையில், தனக்கு நெட்பிளிக்ஸ் வேலையில் இலவசமாக உணவு, அதிகளவிலான சம்பளத்துடன் கூடிய விடுமுறை என பலவும் கிடைத்தது. ஆனால் எனக்கு இந்த வேலை போர் அடித்துவிட்டதால் தான் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என்றும், மேலும் இவரது இந்த முடிவில் அவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை என்றும் கூறியுள்ளார் லின்.
மூத்த மென்பொருள் பொறியாளராகப் பதவி வகித்து வந்த லின் 2017 ஆண்டு நெட்பிளிக்ஸில் சேர்ந்துள்ளார். அதற்குமுன் அவர் அமேசானில் பணிபுரிந்தார். லினின் கூற்றுப்படி, கொரோனா லாக்டவுனில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருந்தபோது அவர் மெது மெதுவாக தனது வேலையில் சலிப்படையத் தொடங்கியுள்ளார், ஆரம்ப காலகட்டத்தில் இந்த பணியில் தான் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், அதற்கான சம்பளமும் தரப்பட்டதாக கூறியுள்ள அவர், கொரோனாவுக்குப்பின் புதிதாக எதையும் தன்னால் கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்.. காரணம் என்ன.?
தற்போது தான் சொந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தான் இதில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ள லின், தனக்கு இந்த தொழிலில் இன்னும் நம்பத்தகுந்த வருமானம் எதுவும் வரவில்லை என்றாலும், உற்சாகமளிக்கும் வேலையைச் செய்வதால் தனக்கு நல்லதே நடக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.