உயிருக்கு போராடும் மனைவி - நகைகளை விற்று இலவச ஆக்சிஜன் வழங்கும் நபர்!

இலவச ஆக்சிஜன் வழங்கும் நபர்

வேகமாக பரவும் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு அசுர வேகத்தில் உயருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பையில் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்கு போராடும் மனைவியின் நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் இலவச ஆக்சிஜனைக் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் பாஸ்கல் சல்தாவின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2வது அலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மரண ஓலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேகமாக பரவும் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு அசுர வேகத்தில் உயருகிறது. இதனால், மருத்துவமனையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், பலர் இடம் கிடைக்காமல் மருத்துவமனைகளில் வெளியிலும், சாலையோரங்களிலும் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு சிலர் விதி வலியது என்று எண்ணி, பாதிக்கப்பட்ட தனது தாய், தந்தை, பாட்டி என உறவுகளை மீண்டும் வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்களால் இயன்ற கவனிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல்வாதிகள், மருத்துவர்களிடம் நன்கு அறிமுகம் வைத்திருக்கும் நபர்களுக்கு கூட உதவி கிடைக்காத சூழல் நிலவுகிறது. அந்தளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை கவலைக்குரியதாக உள்ளது.

மரணச் செய்திகளும், பாதிப்புகளும் ஒருவிதமான பீதியை நாட்டு மக்களிடையே உருவாக்கியிருக்கும் இந்த சூழலில், ஒரு சிலர் செய்யும் சில மனிதநேயமிக்க செயல்கள், மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு சான்றாகவும், கடினமான காலத்தில் அவர்கள் செய்யும் நன்மைகள் ஆறுதலாகவும் இருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த பாஸ்கல் சல்தாதான, மண்டப அலங்காரம் வேலையை செய்து வருகிறார். அவரின் மனைவி 2 சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், வீட்டிலேயே இருந்தவாறு 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். அடிக்கடி டையாலிசிஸ் செய்ய வேண்டியிருப்பதால், வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருகிறார்.

அவருக்காக எப்போதும் வீட்டில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை பாஸ்கல் எக்ஸ்டிராவாக வைத்திருக்கிறார். கொரோனா காலத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலரும் அவதிப்பட்ட நிலையில், பாஸ்கலையும் தலைமையாசிரியர் ஒருவர் தொடர்பு கொண்டு தனது கணவருக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என உதவி கேட்டுள்ளார். தனது மனைவிடம் கேட்டுவிட்டு தலைமையாசிரியருக்கு உவிய அவர், மனைவி கூறியதன்பேரில் இதேபோல் ஆக்சிஜனுக்காக அலையும் மக்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார். வீட்டில் இருந்த மனைவியின் நகைகளை விற்பனை செய்த பாஸ்கலுக்கு 80,000 ரூபாய் கிடைத்துள்ளது.

Also read... கொரோனாவால் வீட்டிலேயே இறந்த தாய்: 2 நாள்களாக உணவின்றி தாய் அருகிலேயே இருந்த 18 மாத குழந்தை - மனதை உலுக்கும் சம்பவம்

அந்த பணத்தைக் கொண்டு, ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு நாள்தோறும் இலவசமாக ஆக்சிஜன் கொடுத்து வருகிறார். இதனையறிந்த சிலர் பிறருக்கு உதவுமாறு பாஸ்கலிடம் பணமும் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயிருக்கு போராடும் மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டு, அவரின் நகைகளை விற்பனை செய்து ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உதவி செய்யும் பாஸ்கலின் மனிதநேயமிக்க செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: