நடிகர் நடிகைகள், பிரபலங்கள் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பும் தீவிரமான ரசிகர் உள்ளனர். அதே போல ஆடைகள், மேக்கப் அணிவது, பேசுவது, உடல் மொழி என்று எல்லா விதங்களிலும் தான் மிகவும் விரும்பும் பிரபலம் போலவே பலரும் தங்களை மாற்றிக் கொள்வார்கள். இது இன்று நேற்று நடப்பதல்ல. சமீபமாக, நடிகைகள் ஆடை அலங்காரம் போலவே தன்னை அலங்கரித்துக் கொள்வது ஒரு டிரெண்டாகவே உள்ளது.
உதாரணமாக, நடிகை நயன்தாராவின் மணப்பெண் அலங்காரம், நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரங்களைப் போலவே ஒப்பனை என்று பல விஷயங்களைக் கூறலாம். ஒரு பக்கம் ஆடை மற்றும் ஒப்பனை மட்டும் போதும் என்று நிறுத்திக் கொள்பவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, தனது முகத்தையே தான் மிகவும் விரும்பும், கொண்டாடும் பிரபலம் போல மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்த கதைகளும் உண்டு. அதில் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஃபேஷன், காஸ்மெட்டிக் சர்ஜரி, செயற்கை மார்பகங்கள் மற்றும் பின்னழகு என்று மாடலிங் மற்றும் ஃபேஷன் உலகில் புகழ் பெற்றவர் கிம் கர்தாஷியன் மட்டுமல்லாமல், அவரின் சகோதரிகள், அம்மா என்று முழு குடும்பமே ஃபேஷன் அண்ட் காஸ்மெட்டிக் டிராமா என்று பல கதைகள் உலவுவதுண்டு. அதே நேரத்தில், உயர்தரமான, பிரபலங்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்கள், ஃபேஷன் பிராண்டுகளுக்கும் சொந்தக்கரார்கள் கிம் மற்றும் அவரின் குடும்பத்தினர்.
கிம் கர்தாஷியன் பல விதமான முக அழகு சிகிச்சை, காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்து, தனது தோற்றத்தை மெருகூட்டிக் கொண்டே வருகிறார். அவரைப் பலவே தோற்றமளிக்க வேண்டும் என்று ஒரு மாடல் அழகி 4 கோடி செலவு செய்து தனது முகத்தை மாற்றியுள்ளார். தான் ரசிக்கும் பிரபலம் போல மேக்கப் போட்டால் போதாது, அவரைப் போலவே கண்கள், கன்னம், இதழ்கள் இருக்க வேண்டுமென்று, காஸ்ட்லியான ஃபில்லர் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், வெர்சேஸ் மாடல் அழகி ஜென்னிஃபர் பாம்ப்லோனா.
ஆனால், இதற்காக அவர் செலவிட்டது கோடிக்கணக்கான ரூபாய்கள் மட்டுமல்ல, பல ஆண்டுகளும் தான். கிம் கர்தாஷியன் போலவே உருவம் இருக்க வேண்டும் என்று ஜென்னிஃபர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில், $6 லட்சம் டாலர்கள் மதிப்பில் 40க்கும் மேற்பட்ட பல விதமான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில் பிரபலமான மற்றும் ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட், பாலிவுட் நடிகைகள் வரை, பலரும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஃபில்லர்கள் மூலம் மூக்கு, தாடை, இதழ்கள் என்று முகத்தோற்றத்தை லேசாக மாற்றியுள்ளனர். அவர்களில் சிலருக்கு, அழகுக்காக செய்த அறுவை சிகிச்சை அலங்கோலமான சிகிச்சையாக மாறி விட்டது. அதே போலத் தான், ஜெனிஃபரும், அவ்வளவு தொகை செலவு செய்தும், கிம் கர்தாஷியன் போல தன்னை மாற்றிக் கொண்ட பிறகு மீண்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி செலவு செய்து தன்னுடைய அசல் முகத்தைப் பெற்றுள்ளார்.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், ஜெனிஃபர் அளித்த பேட்டியின் படி, ‘நான் எங்கு சென்றாலும் என்னை கர்தாஷியன் என்று தான் மக்கள் அடையாளம் கண்டனர். எனக்கு அதை கேட்கும் போதெல்லாம் சலிப்பாக, வெறுப்பாக இருந்தது. நான் படித்திருக்கிறேன், வேலை செய்து வருகிறேன் மற்றும் வெற்றிகரமாக பிசினஸ் செய்து வரும் ஒரு பெண். ஆனால், என்னுடைய சாதனைகள் எதுவுமே என்னை அடையாளப்படுத்தவில்லை. என்னுடைய தோற்றத்தை வைத்து மட்டுமே, நான் கர்தாஷியன் போல இருப்பது மட்டுமே எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது” என்று கூறியிருந்தது.
கர்தாஷியன் பிரபலமாகத் தொடங்கிய போது, அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேச தொடங்கிய போது, 17 வயதில் தானும் அவ்வாறு ஆக வேண்டும் என்று முதல் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறினார். கொஞ்சம் கொஞ்சமாக கிம் போலவே தோற்றமளிக்கத் தடங்கிய ஜெனிஃபர் புகழ் பெறத் தொடங்கினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் கிடைத்தனர். ஆனால், மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை என்று வருத்தப்பட்டார் ஜெனிஃபர்.
பெயரும், புகழும், பணமும் கிடைக்க எக்கச்சக்கமான சர்ஜரிகளை செய்து கொண்ட ஜெனிஃபருக்கு, மன அழுத்தம் மற்றும் அடிக்ஷன் தான் மிஞ்சியது. டிஸ்மார்ஃபியா எனப்படும் மன நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்பு, பல கட்ட தீவிரமான முயற்சிக்குப் பிறகு தான் செய்த தவறை உணர்ந்தவர், மீண்டும் தனது பழைய தோற்றத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.