ரூ.161 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது மைக்கேல் ஜாக்சனின் Neverland ranch பண்ணை வீடு..

ரூ.161 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது மைக்கேல் ஜாக்சனின் Neverland ranch பண்ணை வீடு..

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு

பாப் இசை உலகின் அரசனான மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீட்டை தொழிலதிபர் ஒருவர் சுமார் ரூ.161 கோடிக்கு வாங்கியுள்ளார்.

  • Share this:
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் ராஞ்ச் வீடு தற்போது தொழிலதிபர் ரான் புர்கில் என்ற ஒரு புதிய உரிமையாளருக்கு சொந்தமானது. இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சொத்து 22 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.161 கோடியே 84 லட்சத்திற்கு தொழிலதிபர் புர்கில் ஏலத்தில் எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளது. 

தொழிலதிபர் ரான் புர்கில், மறைந்த பாப் நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் நண்பராவார். இவர் முதலீட்டு நிறுவனமான யூகாய்பா கம்பெனிகளின் இணை நிறுவனரும் ஆவார். பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அதில் கலிபோர்னியாவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீடும் ஒன்று. 

இந்தப் பண்ணை வீட்டை கடந்த 1987-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வாங்கினார். இதில் சுமார் 12,500 சதுர அடியில் பிரதான குடியிருப்பு மற்றும் 3,700 சதுர அடி பூல் ஹவுஸ் தவிர, பண்ணை வீட்டில் சுமார் 50 இருக்கைகள் கொண்ட திரைப்பட அரங்கம் மற்றும் ஒரு நடன ஸ்டுடியோவுடன் ஒரு தனி கட்டிடம் ஆகியவையும் உள்ளன. பண்ணை வீட்டில் உள்ள மற்ற அம்சங்களாக டிஸ்னி பாணியில் ரயில் நிலையம், ஒரு பயர் ஹவுஸ் மற்றும் பார்ன் ஆகியவையும் உள்ளது. மொத்தமாக இந்த பண்ணை வீடு 2,700 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் இந்தப் பண்ணை வீட்டில் வைத்து 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லாது இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக மைக்கேல் ஜாக்சன் நெவர்லேண்ட் பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார். தன் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் பண்ணை வீட்டிற்கு செல்ல மறுத்தார். 

இந்த நிலையில், மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் சொத்தின் விலை 100 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பின்னர் ஒரு வருடம் கழித்து 67 மில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்தது. இதையடுத்து, சமீபத்தில் நடந்த ஏலத்தில் 22 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது.

தற்போது இந்த பண்ணை வீட்டை வாங்கிய தொழிலதிபர் ரான் புர்கில், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் மற்றும் டொராண்டோ ஆகிய இடங்களில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட ஒரு புதிய சோஹோ கிளப் ஹவுஸிற்காக பண்ணை வீட்டை உபயோகிக்க யோசனை கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வீட்டை ஒட்டியிருக்கும் ஜாகா ஏரியை வாங்க கோடீஸ்வரர் புர்கில் யோசித்து வந்ததாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். ஒரு கிளப்புக்கு இந்த இடம் மிகவும் கூடுதல் விலை உயர்ந்தது என்று பர்கில் இறுதியில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 
Published by:Tamilmalar Natarajan
First published: