அண்டார்டிகா பிரதேசத்தில் உருகி வரும் பனிக்கட்டிகள் காரணமாக வரும் 2100-ம் ஆண்டிற்குள் உலகின் அனைத்து எம்பரர் பென்குயின் (Emperor Penguin) குடியிருப்பு பகுதிகளும் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படலாம் என்று சமீபத்திய ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து அழிவின் விளிம்பில் இருக்கும் ஆபத்தான உயிரினங்கள் சட்டத்தின் கீழ் அச்சுறுத்தல் இருக்கும் பட்டியலில் எம்பரர் பென்குயினை சேர்க்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்பரர் பென்குயின்கள் உலகில் வாழும் அனைத்து பென்குயின் வகைகள் எல்லாவற்றையும் விட உயரமானதும், அதிக எடை கொண்டதும் ஆகும்.
இவ்வகை பென்குயின்கள் அண்டார்க்டிக்காவை தாயகமாக கொண்டவை. மற்ற பென்குயின்களை போலவே எம்பரர் பென்குயின்களாலும் பறக்க முடியாது. ஆண், பெண் என இரு எம்பரர் பென்குயின்களும் அளவு மற்றும் தோற்றத்தில் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். இவற்றின் உயரம் 48 அங்குலம் வரையும் எடை 22 முதல் 45 கிலோ கிராம் வரையும் இருக்கும். இவற்றின் தலை, முதுகுப் பகுதிகள் கருப்பாகவும் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மார்புப் பகுதி வெளிர்மஞ்சள் நிறத்திலும் காது மடலருகே நல்ல மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவற்றின் இறக்கைப் பகுதி கடல் வாழ்க்கைக்கு ஏற்ப துடுப்பு போல் இருக்கும். இவற்றின் முதன்மையான உணவு மீன்களாகும். இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தற்போதைய விகிதத்திலேயே காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் எம்பரர் பென்குயின் காலனிகளில் (வாழும் வசிப்பிடங்கள்) 98 சதவிகிதத்திற்கும் அதிகமானவை இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிடும் என்று தெரிய வந்துள்ளது. இது பற்றி கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக எம்பரர் பென்குயின்கள் வசிக்கும் கடல் பனி வாழ்விடங்கள் காலநிலை மற்றம் காரணமாக பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
பென்குயின் சூழலியல் நிபுணர் ஸ்டீபனி ஜெனோவ்ரியர் கூறுகையில், எம்பரர் பென்குயின்களின் வாழ்க்கைச் சுழற்சி நிலையான கடல் பனியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவை இனப்பெருக்கம் செய்ய, உணவளிக்க மற்றும் தங்களை புதுப்பித்து கொள்ள கடல் பனி வாழ்விடங்கள் அவற்றுக்கு தேவைப்படுகின்றன என்றார். உலகளாவிய கார்பன் உமிழ்வு மற்றும் காலநிலை மாற்ற விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு எம்பரர் பென்குயின் காலனிகள் ஆபத்தில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆய்வு உலகளாவிய ஒட்டுமொத்த வெப்பமயமாகும் போக்கு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக தீவிர வானிலை ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளை பற்றியும் ஆராய்ந்தது. கடந்த 2016-ல் அண்டார்டிகாவின் ஹாலி விரிகுடா பகுதியில் எம்பரர் பென்குயின் காலனியில் மிகப்பெரிய இனப்பெருக்க தோல்விக்கு மிகக்குறைந்த அளவிலான கடல் பனி வழிவகுத்தது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே கடல் பனி உடைந்து உருகியதால் அந்த வருடம் சுமார் 10,000 குழந்தை பென்குயின் பறவைகள் நீரில் மூழ்கி இறந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
Also read... 1400 வருடங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்ட வாள் பிரமிடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!
போதுமான கடல் பனி இல்லாமல் எம்பரர் பென்குயின்களால் வாழ முடியாது. காலநிலை நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த இனத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதை இறுதியாக அமெரிக்கா ஒப்பு கொண்டுள்ளது. பறவைகளை அச்சுறுத்தல் பட்டியலில் சேர்ப்பது அவற்றை வணிக நோக்கங்களுக்காக இறக்குமதி செய்வதற்கு தடை போன்ற பாதுகாப்புகளை வழங்குகிறது. பெங்குவின் மீதான சாத்தியமான தாக்கங்களை அண்டார்டிகாவில் தற்போது செயல்படும் அமெரிக்க கடல் மீன்வளம் மதிப்பீடு செய்ய வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள் எடுக்கும் முடிவுகள் எம்பரர் பென்குயின் இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று வனவிலங்கு சேவையின் முதன்மை துணை இயக்குனர் மார்தா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antarctica