அண்டார்டிக்காவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மாதிரி படம்

அட்லாண்டிக் பகுதிகளில் பனி அடுக்குகள் மற்றும் பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அண்டார்டிக்காவில் கணிப்பைவிட பன்மடங்கு வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்து வருகிறது. இதனால் கடல் நீர்மட்டம் உலகளவில் உயர்ந்து வருகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 3.3 மில்லி மீட்டர் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Science Advances journal -ல் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியான ஆய்வு ஒன்றில், மேற்கு அட்லாண்டிக் பகுதிகளில் பனி அடுக்குகள் மற்றும் பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது பனிப்பாறைகளின் படுக்கைகளும் உருகத்தொடங்கியிருப்பதாக எச்சரித்துள்ள அவர்கள், 3 முதல் 4 மீட்டர் வரை ஆண்டுக்கு பனிப்பாறைகள் உருகும் என்ற கணிப்புக்கு மாறாக 20 விழுக்காடு வேகமாக உருகிவருவதாக தெரிவித்துள்ளனர்.

பனிப்பாறை மற்றும் படுக்கைகள் உருகுவது குறித்து உலகளவில் போதிய விழிப்புணர்வுகள் இல்லை. இது கடல் நீர்மட்டத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றத்தால் கடலோரத்தில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும். புவிவெப்பமயமாதலால் கடல் மேல் மட்டத்தில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதாக ஆய்வாளர்கள் நினைத்திருந்த நிலையில், கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகள் உருகுவதை கண்டுபிடித்துள்ளனர். அடிப்பகுதி உருகிவிடுவதால், மேற்பரப்பில் இருக்கும் பனிப்பாறைகள் நீர்பரப்பின் மீது மிதந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்

அன்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் 90களில் இருந்து தற்போது வரை 6.4 ட்ரில்லியன் டன் பனிக்கட்டி உருகியுள்ளதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், இதனால் 17.8 மில்லிமீட்டர் அளவு கடல் மட்டத்தை உயர்த்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். 90-களில் ஆண்டுக்கு 80 மில்லியன் பனிப்பாறைகள் உருகிவந்த நிலையில், 2010 பிற்பகுதியில் 475 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகும் அளவு இன்னும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதனால் 300 மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் எனக் கூறியுள்ளனர். 2100 ஆம் ஆண்டில் 200 மில்லியன் மக்கள் நிரந்தரமாக கடலோரத்தில் இருக்கும் குடியிருப்புகளைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Also read... பிரபலமாகும் குக்கரில் ஆவி பிடிக்கும் முறை - கர்நாடக காவல்துறையின் சூப்பர் ஐடியா!

மேலும், கடல் பகுதிகளில் மிகவும் ஆபத்தான புயல்கள் உருவாகி மக்களை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும், பருவநிலையிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற சூழலியல் பிரச்சனைகள் குறித்து உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஏட்டளவில் போட்டபடும் தீர்மானங்கள் மற்றும் மாநாடுகளால் எந்த பயனும் இல்லை எனக் கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், செயல்வடிவம் மட்டுமே மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: