இவ்வுலகில் வினோத நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. வினோதமான மனிதர்கள் சில நேரங்களில் வினோதமான செயல்களில் ஈடுபட்டு அது கேமரா கண்களில் சிக்கினால் பின்னர் அது வைரலாக பரவி விடுகிறது.
உணவு டெலிவரி செய்யும் தொழிலில் இது போன்ற வினோதங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. தவறான இடத்தில் டெலிவரி செய்வது, தவறான உணவை டெலிவரி செய்வது, முழுமையற்ற உணவை டெலிவரி செய்வது என சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம். இது போன்ற வாடிக்கையாளரின் குறைகள் குறித்து புகாரளித்தால் அதனை நிறுவனத்தின் தரப்பில் இருந்து தீர்த்து வைப்பார்கள். சில நேரங்களில் அதற்கான பணமும் கூட திருப்பி அளிக்கப்பட்டுவிடும். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவம் வினோதங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
லண்டனின் கெண்டிங் டவுன் பகுதியில் தனது சகோதரியுடன் வசிக்கும் நபர் ஒருவர் McDonald's நிறுவனத்திடமிருந்து பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென தனது ஆர்டர் கேன்சல் ஆனதை கண்டு குழம்பிய அந்த நபர் உணவு டெலிவரி செய்யும் நபர் தனது வீட்டு வாயில் முன்பாக இருந்து கொண்டே தனது ஆர்டரை கேன்சல் செய்தது தெரியவந்தது. அதோடு மட்டுமல்லாமல் தான் ஆர்டர் செய்த பர்கரை அந்த உணவு டெலிவரி செய்ய வந்த நபர் சாப்பிட்டதை கண்டு அதிர்ச்சியுடன் அடைந்தார்.
இதனை தனது மொபையில் வீடியோவாக எடுத்த நபர் அதனை ட்விட்டரில் பதிவிட, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக McDonald's நிறுவனம் அளித்துள்ள பதிலில் குறிப்பிட்ட சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தங்களின் தரத்தை தாழ்த்தும் இது போன்ற சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், புகார் அளித்த வாடிக்கையாளரிடமும் நாங்கள் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.