இந்தியாவில் இளம் வயது திருமணங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்திலேயே எண்ணற்ற குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, பெற்றோரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் கட்டாய திருமணங்களை நிறுத்திவிட்டு மணமகன் அல்லது மணமகள் அவர்களது அன்புக்குரிய காதல் துணையை கரம் பிடித்த செய்தியையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வாழ்வது ஒருமுறை, அந்த வாழ்க்கையை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம் என்று முழுமையாக நாம் தனித்து செயல்பட்டுவிட முடியாது. பெற்றோரின் கருத்துக்களுக்கும், விருப்பங்களுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டியுள்ளது. அதில் பல தருணங்களில் நியாயமும், தேவையும் இருப்பதை மறுக்க இயலாது.அதே சமயம், கட்டாய திருமணம் என்றொரு பிரச்சினை இந்தியாவில் மட்டும் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பின் அது கட்டாயமாக தவறாகும். சீனாவிலும் அண்மையில் கட்டாய திருமணம் குறித்த ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டாய திருமணம் என்பது மனித உரிமைகளை மீறிய செயலாகும். உலகெங்கிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன என்பதைத் தான் சீன நிகழ்வு உணர்த்துகிறது.
சீனாவின் குய்ஸோ மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணான யான் என்பவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அப்போது, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறி அந்தப் பெண் மனம் உடைந்து அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டன. அதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த உலகிற்கும் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, மணப்பெண்ணுக்குரிய வெள்ளை நிற அலங்கார உடையில் யான் அழைத்து வரப்பட்டார். விருந்தினர்களின் பார்வைகள் மற்றும் அனைத்து கேமராக்களின் பார்வையும் மணமக்கள் மீது இருந்தது. ஆனால், மணமகள் முகத்தில் திருமணத்திற்கான மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை. அவர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை உடைத்து சொல்லிவிட்டார்.
இதுகுறித்து மணப்பெண் யான் கூறுகையில், “என் பெற்றோருக்கு வயதாகி கொண்டே இருப்பதால், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். அவர்களுக்கு கலாச்சார ரீதியிலான கடமைகளை முடிக்க வேண்டிய தேவை இருந்தது. அதேபோல என் உறவினர்களும் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். அக்கம், பக்கத்தினர் என்னை பற்றி கிசுகிசு பேசத் தொடங்கிவிட்டனர். இத்தகைய தருணத்தில், நான் பெரிதும் சந்தித்து பழகாத ஒருவரை மணமகனாக ஏற்றுக் கொண்டேன்’’ என்று தெரிவித்தார்.
தன் பெற்றோரின் விருப்பம், அவர்களது நிம்மதி ஆகியவற்றுக்காக திருமணம் செய்து கொள்வதாகவும், மணமகன் மீது தனக்கு துளியும் காதல் இல்லை என்றும், இனி தனக்கென எதிர்காலம் இல்லாமல் போய்விட்டதாகவும் யான் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.