சொர்க்கத்தின் குழந்தைகள்
மைதானங்களில்
எப்போதும் கிழிந்த காலணிகளுடனோ
காலணிகள் இல்லாமலோதான்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
சொர்க்கத்தின் குழந்தைகள்
தங்கள் நரகத்தின் இருளிலிருந்து
வெறும் காலுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
வனங்களில் மான்கள் ஓடுவதுபோல
நீருக்கடியில் மீன்கள் நீந்துவதுபோல
ஆகாயத்தில் பறவைகள் செல்வதுபோல
அவர்கள் மைதானங்களில்
சுழல் வட்டபாதைகளில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு முதல் வாய்ப்புதான்
கடைசி வாய்ப்பும்
வழியில் அவர்கள் காலிடறி விழுந்துவிட்டால்
இன்னொரு மைதானம் அவர்களுக்கு இல்லை
இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லை
அவர்கள் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட
ஒரு குண்டைபோல காற்றில் பறந்து செல்கிறார்கள்
அவர்கள் ஓடும்முன்
தங்கள் கிழிந்த காலணிகளை
ஒருகணம் உற்றுப்பார்க்கிறார்கள்
தங்கள் அருகில் ஓடத் தயாராக இருக்கும் கால்களின்
புத்தம் புதிய பளபளக்கும் ஷீக்களை பார்கிறார்கள்
ஓடுவது கால்களே தவிர
காலணிகள் அல்ல என
தங்களைத்தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள்
சொர்க்கத்தின் குழந்தைகளில் யாரோ ஒருத்தி
கிழிந்த காலணிகளுடனோ
வெறுங்காலுடனோ எல்லைக்கோட்டை தொட்டுவிடுகிறாள்
அவள் தன் தலையை உயர்த்தி
இந்த உலகத்தோடு பேசத் தொடங்குகிறாள்
தன் பசியைப் பற்றி
தன் அவமானங்களைப் பற்றி
தன் ஏழ்மையான பெற்றோர்களைப் பற்றி
தன் கிழிந்த காலணிகளைப் பற்றி
அவளுக்கு தன் கனவுகள் பற்றி
தன் ஓட்டத்தின் நுட்பங்கள் பற்றி,
தன் கடக்கும் நேரத்தை எப்படி படிப்படியாக
குறைத்துக்கொண்டாள் என்பது பற்றி,
ஓடும்போது தன் மனமும் உடலும்
எவ்வாறு மாறுகிறது என்பதுபற்றி
சொல்வதற்கு நூறு விஷயங்கள் இருக்கின்றன
ஆட்டகாரர்கள் தங்கள் ஆட்டத்தின்
உன்மத்தம் பற்றிப் பேசுவதை
நான் நிறையக் கேட்டிருக்கிறேன்
ஆனால் ஒரு சொர்க்கத்தின் குழந்தையிடம்
நாம் கேட்பதற்கு அவளது துயரங்களைத் தவிர
வேறு எதையும் நாம் கேட்கவிரும்புவதில்லை
சொர்கத்தின் குழந்தைகள்
எப்போதும் தங்கள் கிழிந்த காலணிகளைப்பற்றி
பேசத் தூண்டப்படுகிறார்கள்
நீங்கள் அவர்களை
ஒரு வினோத உயிரியாய் பார்க்கிறீர்கள்
ஒரு வேற்றுக்கிரகவாசியைபோல பார்க்கிறீர்கள்
உங்கள் குற்ற உணர்வின் மலர்களை
அவர்களது கிழிந்த காலணிகள் மேல் வைக்கிறீர்கள்
சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல
என்ற ஒரு சமாதத்தின் மூலம்
அவர்களது எல்லா வரலாற்றுத் துயரங்ககுக்கும்
நியாயம் செய்துவிடுகிறீர்கள்
பந்தயங்களில்
வெற்றி பெற்றவர்கள்
தங்கள் கைகளை உயர்த்தி வணங்குகிறார்கள்
சொர்க்தின் குழந்தைகள் மட்டும்
தங்கள் உயர்த்திய கரங்களில்
ஒரு கிழிந்த காலணியையும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்
- மனுஷ்ய புத்திரன்
ஆசிய தடகள போட்டியில் கிழிந்த காலணியுடன் பங்கேற்று தங்கம் வென்றதாக, தமிழக வீராங்கனை கோமதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டே விமான பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.