இன்றைய நவ, நாகரீக உலகில் ஆண்களின் உடைகளாகக் கருதப்படும் பேண்ட், ஷர்ட், டீ ஷர்ட் போன்ற உடைகளை பெண்கள் பலரும் அணிந்து கொள்வது நாம் அன்றாடம் பார்க்கும் இயல்பான விஷயங்கள் தான். அதாவது, இந்த வகை உடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது. எந்த பாலினத்தவரும் அவற்றை அணிந்து கொள்ளலாம் என்ற சூழல், அதை ஏற்கும் மனப்பக்குவம் இயல்பாக அனைவரிடத்திலும் இருக்கிறது.
ஆனால், அக்கம், பக்கத்திலோ, கடை வீதிகளிலோ அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்திலோ, ஆண் ஒருவர் பெண்களின் உடைகளை அணிந்து கொண்டு வருவதை பார்த்தது உண்டோ? இவ்வளவு ஏன், நீங்கள் ஆணாக இருப்பின், என்றாவது ஒருநாள் நீங்கள் பெண் உடையை அணிவதைப் போல கற்பனை செய்ததுண்டா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் பெரும்பாலும் இல்லை என்பதாகத் தான் இருக்கும். ஏனென்றால், சேலை, சுடிதார் போன்ற உடைகள் பெண்கள் அணிவதற்கானவை என்ற கட்டுப்பாடு எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இத்தகைய பேதத்தை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தன்னையே அதற்கான எடுத்துக்காட்டாக மாற்றிக் கொண்டுள்ளார் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கடை வீதியில் சேலை உடுத்தி வலம் வருகிறார்
கொல்கத்தாவின் சோவா பஜாரில், டீ மாஸ்டரைப் பார்த்து இளைஞர் ஒருவர் “அண்ணா சூடா ஒரு டீ போடுங்க’’ என்று சொல்ல, அவரை நிமிர்ந்து பார்த்த டீ கடைக்காரர் ஒரு கனம் திகைத்து விட்டார். காரணம், மீசையும், தாடியும் கொண்ட அந்த இளைஞர், மிக நேர்த்தியாக சேலை அணிந்திருந்தார்.
ஒருசில நொடிகளில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட டீ கடைக்காரர், சூடாக டீ போட்டு கொடுத்ததும் அதை கைகளில் ஏந்தி பருகத் தொடங்கினார் புஷ்பக் சென்.
கண் எதிரில் தென்படும் ஒவ்வொரு நபரும் இந்த இளைஞரை சற்று ஆச்சரியத்துடன் ஏற, இறங்க பார்க்கின்றனர். அதுபோன்ற சமயங்களில், “ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா’’ என்று தனது கேள்வியை அமைதியாக முன்வைக்கிறார் புஷ்பக் சென்.
சேலை அணிவதற்கு காரணம் என்ன?
புஷ்பக் சென்னுக்கு 26 வயது ஆகிறது. இவர் ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆகவே, அவர் சேலை அணியத் தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற சவால் மிகுந்த விஷயத்தை ஆன்லைன் தளங்களில் பேசுவது எளிதானது. ஆனால், யதார்த்த உலகில் அந்த தடைகளை தகர்த்து செயலில் காட்டுவது கடினம். ஆகவே தான், இதைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார் புஷ்பக் சென்.
விருதோ, அங்கீகாரமோ தேவையில்லை :
புஷ்பக் சென் இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளதற்கு புகழ்ச்சி அடைய வேண்டும் என்பது தான் காரணமா என்ற கேள்வியை முன்வைத்தால், மறுகணமே அதை முழுவதுமாக மறுக்கிறார். தனக்கு எந்தவித புகழ்ச்சியும் தேவையில்லை என்றார் அவர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் நபர் என்ற விருது எனக்கு கிடைக்குமா? நான் விருது பெற விரும்புகிறேனா? இல்லை. பின்னர் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். வங்கத்தை, எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணி்ன் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.