கோபம் வர மாதிரி காமெடி பண்ணக் கூடாது... சுந்தர் பிச்சையிடம் வேடிக்கையான உதவி கேட்ட சேட்டை இளைஞர்

சுந்தர் பிச்சை

ஜிமெயில் பாஸ்வேர்டு தொலைவிட்டதால், அக்கவுண்டை ரெக்கவர் செய்ய உதவ வேண்டும் என சுந்தர்பிச்சையிடம் நெட்டிசன் கேட்ட உதவி இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பேரிழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சவாலான நேரத்தில் உலக நாடுகள் தங்களின் நேசக்கரத்தையும், தங்களால் இயன்ற உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளன. உலக நாடுகள் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை அளித்துள்ளனர். கவலைதோய்ந்த நேரத்தில் இருக்கும் மக்களுக்கு, இணையத்தில் நடக்கும் சில விஷயங்கள் அவர்களை ஆற்றுப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும் உதவியாக உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ளும் இந்தியாவுக்கு, உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 135 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக டிவிட்டரில் அறிவித்தார். Give India மற்றும் UNICEF மூலம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்தப்படும் என கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த சூழலில், நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ஜிமெயில் அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்த உதவுமாறு கேட்டுள்ளார்.கூகுள் CEO சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு கோவிட் நிவாரணம் அறிவித்த டிவிட்டரில் கமெண்ட் செய்துள்ள மதன் என்ற நெட்டிசன், தன்னுடைய ஜிமெயில் அக்கவுண்டின் பாஸ்வேர்டை மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஜிமெயில் அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ள அவர், பாஸ்வேர்டை ரீசெட் செய்து அக்கவுண்டை ரெக்கவர் செய்வதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீரியஸாக நிவாரணம் அறிவித்துள்ள சுந்தர் பிச்சையிடம், தன்னுடைய ஜிமெயில் அக்கவுண்டை ரெக்கவர் செய்ய நெட்டிசன் உதவி கேட்டது இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலர் மதனின் கோரிக்கையை பார்த்து சிரித்துள்ளனர். கோவிட் கட்டுப்பாடுகள் இருப்பதால் சுந்தர் பிச்சை இந்தியா வர முடியாது என தெரிவித்துள்ள மற்றொரு நெட்டிசன், கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகு சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்து மதனின் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவார் எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன் சிரிப்பை அடிக்க முடியாமல், எல்லோரும் கொரோனா வைரஸால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் மதன் காமெடி செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அவரின் இந்த செயல் பாதிக்கப்பட்டவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் பலரும் மனிதாபிமானத்துடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், இனி வரும் காலங்களில் டபுள் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Published by:Vijay R
First published: