பெண் ஒருவரின் செயலை பொய் என நிரூபிக்க கொரில்லா க்ளூ ஸ்பிரேவை வாயில் ஒட்டிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் லுசியானா பகுதியை சேர்ந்தவர் டெசிகா பிரவுன். இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தலைமுடியை பராமரிக்க வழக்கமாக உபயோகிக்கும் ஹேர் ஸ்ப்ரேவுக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியாக தெரிவித்தார். பின்னர் அதனால் தலைமுடிக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் தெரிவித்திருந்தார். இதனை பயன்படுத்திய பிறகு அவரது முடி தலையிலேயே இறுக்கமாக ஒட்டிக் கொண்டது என கண்ணீர் மல்க தனது சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்திருத்தார். அவரது வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கொரில்லா க்ளூ நிறுவனம் அவரின் நிலையை அறிந்து மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டது.
இதனையடுத்து, லெனின் மார்டின் என்ற அமெரிக்கர் அந்த பெண்ணின் செயல் பொய்யானது என்றும், சமூகவலைதளங்களில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதனை அவர் செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கொரில்லா ஸ்பிரேவை தானும் பயன்படுத்தி அந்த பெண் செய்தது பொய் என நிரூபிக்க உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கொரில்லா ஸ்பிரேவை எடுத்த அவர், வாய் பகுதியில் பேப்பர் கப் ஒன்றை பயன்படுத்தி ஒட்டிக்கொண்டார். எளிதில் அந்த கப்பை எடுத்துவிடலாம் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் நினைத்ததுபோல் அந்த பேப்பர் கப்பை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவரது உதடுகள் இன்னும் ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான வலியால் அவதிப்பட்டு வரும் மார்டின், தன்னுடைய உடல் நலம்பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என சமூகவலைதள பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். கொரில்லா சேலஞ் (#gorilla Challenge) என்ற ஹேஸ்டேக்கின் கீழ் அவர் பதிவிட்ட இந்தக் கருத்து நெட்டிசன்களிடம் எரிச்சலையும், நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிகிச்சைக்குப் பிறகு பேசிய மார்டின், கொரில்லா க்ளூவைப் பயன்படுத்தியதால், தலைமுடி ஒட்டிக்கொள்வதாக அந்த பெண் கூறியதை நம்பவில்லை எனத் தெரிவித்தார். இதனை பொய் என நிரூபிக்க முடிவெடுத்ததாக தெரிவித்த அவர், கொரில்லா க்ளூவை வாயில் தடவி பேப்பர் கப் ஒன்றை அதன்மீது வைத்ததாக கூறினார். ஆனால், தான் நினைத்ததுபோல் அவ்வளவு எளிதாக இல்லை எனக் கூறிய அவர், உண்மையிலேயே தனக்கு ஏற்பட்ட மிக்கொடுமையான அனுபவம் எனத் தெரிவித்துள்ளார்.