கோவிட்-19 பெருந்தொற்று நமது வாழ்க்கையை தலை கீழாகக் புரட்டிப் போட்டுள்ளது. வெளியே செல்வது, பயணம் போன்றவற்றை முற்றிலுமாக இல்லாமல் செய்திருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தொடங்கியுள்ளது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, இந்த மாற்றங்கள் எந்த பாகுபாடுமின்றி முற்றிலும் புதிய அனுபவங்களாகவே ஏற்படுகின்றன. அந்த வகையில், எட்டு மணி நேரம் ஒரே ஒரு பிரயாணி மட்டுமே, அதாவது தனியாக ஒரு விமானத்தில் பயணித்துள்ளார். யுகேவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணித்த பிரபல டிக்டாக் யூசர் Kai Forsyth என்பவருக்கும் ‘வித்தியாசமான அனுபவம்’ ஏற்பட்டுள்ளது.
யுகேவில் இருந்து ஃபோர்சித் விமானத்தில் ஏறியபோது, அந்த விமானத்தின் ஒரே பயணி அவர் மட்டும் தான் என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டார். எட்டு மணி நேரம் எந்தப் பயணியும் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்டார் ஃபோர்சித். விமானம் முழுக்க காலியாக இருந்ததைப் பார்த்து குஷியான டிக்டாக் பிரபலம், தனது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை உருவாக்கி, டிக்டாக்கில் வெளியிட்டார்.
டிக்டாக் கணக்கில் வீடியோக்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து பகிர்ந்துள்ளார். வீடியோவில் உள்ள காட்சிகள் விமானம் புறப்படுவதற்கு முன் தொடங்கி, விமானத்தில் உள்ள காலி இருக்கைகளைக் காட்டுகிறது. "விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என்று கேபின் குழுவினர் தெரிவித்தனர்" என்று வீடியோவின் கேப்ஷனில் பகிர்ந்துள்ளார்.
அடுத்த காட்சியில், விமானத்தில் ஒரே வரிசையில் இருக்கும் மூன்று இருக்கைகளை இணைத்து, ஒரு தற்காலிக படுக்கை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.விமானம் அமெரிக்காவைச் சென்றடைய எட்டு மணி நேரம் ஆகும் என்பதால் படுக்கையை அமைத்ததாகத் தெரிவித்தார்.
Also read... Viral Video | விமானம் மீது ரயில் மோதி விபத்து.. நூலிழையில் தப்பிய விமானி
"இது வரை மேற்கொண்ட விமானப் பயணங்களிலேயே, இது தான் சிறந்தது என்று" என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.மேலும், அவரிடம் நிறைய தின்பண்டங்கள் இருப்பதையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.ஃபோர்சித் ஒரே ஒரு பயணியாக இருந்தாலும், அவர் விரும்பும் சிற்றுண்டி வகைகளை எந்த வரம்பும் இல்லாமல் வழங்கியதாகத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, இது வரை எங்குமே நடந்திராத அளவுக்கு, பயணிகளின் எண்ணிக்கையைவிட, விமான ஊழியர்களான பணிப்பெண்கள், விமானிகள் அதிகமாக இருந்துள்ளனர்.
தனியே இருந்ததால், விமான கேபின் குழுவினருடன் உரையாடி நட்பு கொள்ள முயற்சி செய்தார்."நாங்கள் மணிக்கணக்கில் திரைப்படங்களைப் பார்த்தோம், வரம்பற்ற சிற்றுண்டிகளை சாப்பிட்டோம்" என்று பகிர்ந்திருந்தார்.
"இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம்" என்ற தலைப்பில் அவரது வீடியோக்கள் வெளியாகின. ஃபோர்சித் பகிர்ந்த வீடியோவின் இணைப்பு இங்கே.
ஃபோர்சித்தின் வினோதமான அனுபவத்தைப் பார்த்து டிக்டாக் ரசிகர்கள் மகிழ்ந்தனர். இதெல்லாம் நிஜமா என்று கிள்ளிப்பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, இவர் தனது கனவை வாழ்கிறார் என்று பலரும் ஃபோர்சித்தைப் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.