Home /News /trend /

நிஜத்தில் ஒரு 'மின்னல் முரளி’ - வைரலாகும் வீடியோ

நிஜத்தில் ஒரு 'மின்னல் முரளி’ - வைரலாகும் வீடியோ

காட்சி படம்

காட்சி படம்

Viral Video : ஒரு நபரின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

எப்போதும் மழை பெய்யும் போது இடி, மின்னல் போன்றவற்றின் தாக்கம் அதிகம் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் திறந்த வெளியில் நடப்பதும், மரத்திற்கு கீழே நிற்பதும் மிகவும் ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இடி, மின்னலுடன் கூடிய மழை காலங்களில் வீட்டிற்குள் அல்லது கட்டிடத்திற்குள் அல்லது காருக்குள் இருப்பது நல்லது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதுபோன்ற சமயங்களில் மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்தோனேசியாவில் 35 வயது கொண்ட ஒரு நபரின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், மின்னல் தாக்கிய அந்த நபர் உயிருக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தப்பியது தான். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் கேமராவில் பதிவாவது மிக அரிது. சிசிடிவி கேமராவில் எதேச்சையாக சிக்கிய இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு காண்போரை திகைக்க வைத்துள்ளது.

ஒரு அலுவலகத்தில் பாதுகாவலரான பணிபுரிந்துவரும் இவர், கடந்த வார தொடக்கத்தில் பணியில் இருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ​​அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இவர் மழை பெய்து கொண்டிருப்பதன் காரணமாக ஒரு குடை பிடித்துக்கொண்டு ஏதோ பணிக்காக சென்று கொண்டிருப்பதைக் காணலாம். அப்போது திடீரென வானத்தில் இருந்து மின்னல் வேகமாக அவரது குடையை தாக்கியது.

தாக்கிய கணமே தீப்பொறி குடையில் இருந்து வெளிப்பட்டன. உடனே அந்த நபர் தரையில் மயங்கி விழுந்தார். மேலும் சில நொடிகள் அவர் தலை தூக்கி பார்ப்பது போல இருந்தது. இந்த சம்பவம் நடந்த உடனேயே அங்கிருந்த பிற ஊழியர்கள் வேகமாக சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வடக்கு ஜகார்த்தாவின் கடலோர நகரமான சிலின்சிங்கில் மழைக்கால பருவம் நடந்து வருகிறது.

also read : தனது செல்லப் பிராணியான பூனையை விமானத்தில் கொண்டு சென்ற பாசக்கார மனிதர்

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபர் மீது மின்னல் தாக்கியதாக அப்பகுதியின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அந்த நபரின் பெயர் அப்துல் ரோசிட் என்றும், மின்னல் அவரை நேரடியாக தாக்கியிருந்தாலும் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிர்ஷ்டசாலியின் கையில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உள்ளூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று சிலின்சிங் போலீஸ் கமிஷனர் ஆர். மனுருங் தெரிவித்துள்ளார்.


மழைக்காலத்தில் குடைகள் அவசியம் என்றாலும், இடியுடன் கூடிய மழையின் போது அவை எவ்வளவு பாதுகாப்பானவை என்பது குறித்த கேள்விகள் இப்போது அப்பகுதியில் பரவலாக எழுந்துள்ளது. எனவே மழையில் நடக்கும்போது ரேடியோ மற்றும் மொபைல் ஃபோனைப் பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளூர் பத்திரிகைகள் அப்பகுதி மக்களை எச்சரித்து வருகின்றன. இந்த வீடியோ நமக்கும் ஒரு பாடமாக தான் அமைத்துள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி