பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற போக்குவரத்து வசதிகளில் நாம் பயணம் செய்யும் போது, நமது உடமைகளை தொலைத்து விடுவது அல்லது மறந்து வைத்துவிட்டு வந்து விடுவது என்பது இயல்பானது தான். இத்தகைய சமயங்களில் நாம் என்ன செய்வோம். தொடர்புடைய போக்குவரத்து துறை அல்லது நிறுவனத்தின் அதிகாரிகளை அணுகி புகார் அளிப்போம். கொஞ்சம் மதிப்புள்ள பொருட்களை தொலைத்திருந்தால், அதுகுறித்து காவல் நிலையத்தில் நாம் புகார் அளிப்பது வழக்கம்.
ஆனால், இண்டிகோ விமானத்தில் சமீபத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், பையை தொலைத்துவிட்டு, அதற்கு பிறகு செய்த காரியம் தான் இப்போது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்தார். அப்போது, இவரது பையை போன்றே பை கொண்டு வந்திருந்த மற்றொரு நபரிடம், இவரது பை கை மாறி சென்றுவிட்டது போல. இதை அந்த முதலாம் நபர் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார்.
வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார்
பையை தொலைத்த பிறகு, பொதுவாக மற்ற வாடிக்கையாளர்கள் செய்வதைப் போலவே இந்த நபரும் இண்டிகோ விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவை அழைத்து புகார் தெரிவித்தார். ஆனால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் இவரது புகாருக்கு தகுந்த பதிலை கொடுக்கவோ அல்லது பையை திரும்பப் பெற்றுத் தரவோ உதவி செய்யவில்லை.
இணையதளத்தை ஹேக் செய்ய முடிவு
இண்டிகோ நிறுவன பணியாளர்கள் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், பையை தொலைத்தவர் மிகுந்த கோபம் அடைந்தார். எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்ய முடிவு செய்தார். அதாவது, இணையதளத்தில் சக பயணிகளின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதை கண்டுபிடித்து விட்டால், பையை கொண்டு சென்ற நபரை கண்டுபிடித்து அதை திரும்பப் பெற்று விடலாம் என்பது இவரது நம்பிக்கை.
இந்த நிகழ்வு குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பை மீது ஒட்டப்படும் டேக்-கில் சக பயணியின் பிஎன்ஆர் நம்பர் இருந்தது. அதை வைத்து, என்னுடைய பையை கொண்டு சென்ற நபரை அடையாளம் கண்டுபிடிக்குமாறு இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தை அணுகினேன். ஆனால், அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
Also read... Google Chrome-ல் பாதுகாப்பு சிக்கல்.. உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்படுவதை தவிர்க்க உடனே இதை செய்யுங்கள்.
இதனால், பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, டிவைஸ் குறித்து நான் அறிந்த டிப்ஸ்களை செயல்படுத்தினேன். கம்ப்யூட்டரில் எஃப் 12 பட்டன் அழுத்திய பிறகு, இண்டிகோ இணையதளத்தில் டெவலப்பர் பக்கம் திறந்து கொண்டது. அதில் இருந்து அனைத்து பயணிகளின் செக் இன் விவரங்களை நான் பெற்றுக் கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.
அதே சமயம், இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்திலேயே சக பயணிகளின் விவரம் இருக்கிறது என்ற சூழலில், இவர் ஹேக் செய்திருக்க வேண்டியதில்லை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், இண்டிகோ நிறுவனம் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருப்பதையும் அவர்கள் கண்டிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.