இங்கிலாந்தில் பார்சல் டெலிவெரியில் சிறுநீர் அடைக்கப்பட்ட பாட்டில் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், பலரும் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்தனர். லண்டனைச் சேர்ந்த ஒருவரும் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை திறந்து பார்த்தபோது அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். வாடிக்கையாளருக்கு வந்த பார்சலில் சிறுநீர் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அவர் டிவிட்டரில் புகைப்படத்துடன் அந்த பார்சலை பதிவிட்டதையடுத்து, அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலானது.
உணவை டெலிவரி செய்த நிறுவனத்தின் பெயருடன் டிவிட்டரில் பதிவிட்ட ஆலிவர், "ஹலோ! பிரஷ் யூகே, எதற்காக யாரோ ஒருவருடைய சிறுநீரை பாட்டிலில் அடைத்து எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் உங்களின் முகவரியை எனக்கு அனுப்புங்கள், நீங்கள் அனுப்பிய பார்சலை திருப்பி அனுப்புகிறேன், அதன் முகர்ந்து பாருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
பின்னர் உடனடியாக அந்த டிவிட்டை நீக்கிய அவர், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் பெயரைப் பயன்படுத்தி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். ஆலிவரின் குற்றச்சாட்டையடுத்து, அவருக்கு உணவை அனுப்பிய ஹலோ பிரஷ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிகழ்வுக்கு என்ன சொல்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிறுவனம் டெலிவரி செய்யும் உணவுடன், தண்ணீர் பாட்டில்களை ஒருபோதும் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளதுடன், டெலிவரி செய்பவர்களிடம் இதுபோன்று தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
Also read... இணையத்தை கலக்கும் 100 வயது பாட்டியின் அட்வைஸ்: இளசுகள் கவனிக்க வேண்டிய அறிவுரைகள்!
விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக டிரைவர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பியிருக்கலாம் என்றும், அதனை தவறுதலாக பார்சலுடன் கொடுத்திருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. உணவு நிறுவனத்தின் விளக்கத்தை ஆலிவரும் ஏற்றுகொண்டார். அவர் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், உணவு பார்சல் முறையாக இல்லாமல் பிரித்து இருந்ததாகவும், டெலிவரி செய்பவர்கள் தவறு செய்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய ஆலிவர், இந்த நிகழ்வு எனக்கு வியப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். துருதிஷ்டமான விஷயம் என்றாலும், இந்த விஷயத்தில் யாரையும் பணி நீக்கம் செய்வதை அல்லது சிக்கலில் சிக்குவதை தான் விரும்பவில்லை எனக் கூறினார். அதேநேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இங்கிலாந்தில் இருக்கும் வேலையின் சூழல்களை வெளிக்காட்டும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆலிவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.