பாகிஸ்தான் நாட்டின் லூகூர் நகரில் உள்ள நபர் ஒருவரது பைக் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. அந்த பைக் தொடர்பான இ-சலான் ஒன்று தனக்கு வந்து சேர்ந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதைவிட பேரதிர்ச்சி தரும் விஷயமும் அவருக்கு காத்திருந்தது. அதாவது, லாகூரில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தான் அவரது பைக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டது.
லாகூர் நகரைச் சேர்ந்த இம்ரான் என்பவரது பைக் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. அந்த பைக் தற்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, எலெக்ட்ரானிக் ரசீது ஒன்று அவருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக காணாமல் போன தன்னுடைய ஹோண்டா சிடி 70 பைக் குறித்து, லாகூரின் முகல்புரா நகரில் இம்ரான் புகார் கொடுத்திருந்தார். இத்தனை ஆண்டுகளாக பைக் குறித்து எந்தத் தகவலும் இம்ரானுக்கு கிடைக்கவில்லை. இத்தகைய நிலையில், போக்குவரத்து விதியை மீறியதாக, தன்னுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-சலான் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போட்டோவில் இருந்த போலீஸாரின் புகைப்படம்
இம்ரானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரசீதில், அந்த பைக் போக்குவரத்து விதியை மீறிய போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தை அவர் ஆழ்ந்து நோக்கியபோது பாகிஸ்தான் காவல்துறையினர் அதை ஓட்டிச் சென்றது அவருக்கு தெரிய வந்தது. லாகூர் நகருக்கு அருகாமையில் உள்ள ஸாபஜார் பகுதியில் காவல் துறையினர் இவரது வாகனத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பது, அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது.
Also Read : மாணவியை விசிறி விட சொல்லி வகுப்பறையில் நிம்மதியாக தூங்கிய அரசு பள்ளி ஆசிரியை
தனது பைக்கை காவல் துறையினர் பயன்படுத்திக் கொண்டிருப்பது குறித்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த இம்ரான், அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பைக்கை தன்னிடம் ஒப்படைக்குமாறு காவல் துறையிடம் அவர் பலமுறை புகார் மனு அளித்தார். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முதன்மை மக்கள் நல அலுவலரையும் அவர் சந்தித்து முறையிட்டதாகவும், ஆனாலும் கூட பைக் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும் இதேபோன்ற சம்பவம்
இந்தியாவிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கிழக்கு டெல்லியில் உள்ள நபர் ஒருவரது கார் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருடு போனது. அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் போக்குவரத்து விதியை மீறியதாக அவருக்கு சலான் வந்து சேர்ந்தது.
இந்நிலையில், தன்னுடைய கார் திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், அதன் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த, காரை திருடி சென்ற நபரின் படம் தெளிவாக இல்லை என்பதால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.