இங்கிலாந்து நாட்டில் ஒருவர் ஆபத்தை உணராமல் தனது வீடு முழுவதும், கையெறி குண்டுகளால் அலங்கரித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் அனைவரும் வாழும் இடத்தை அழகாக அலங்கரிக்க விரும்புகிறோம். சிலர் தங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளுக்கு குவளைகள், புகைப்பட சட்டங்கள், சுவர் தொங்கல்கள், ஆடம்பரமான மண்பாண்டங்கள், விளக்குகள் மற்றும் சிற்பங்கள் போன்ற அலங்கார விருப்பங்களை அமைத்துக்கொள்கிறார்கள். பொதுவாக வீட்டை கலைநயத்துடன் அலங்கரிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி அலங்கரிக்க உதவும் கைவினை பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாத கழிவு பொருட்களில் இருந்து பயன்படுத்தினால் உங்கள் திறமையுடன் சமுதாயமும் காப்பாற்றப்படும்.
பிளாஸ்டிக் பொருட்கள் ஆக இருந்தால் பரவாயில்லை இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் ஒருபடி மேலே சென்று தனது வீட்டை ஒரு தனித்துவமான மற்றும் வினோதமான முறையில் அலங்கரித்துள்ளார். இங்கிலாந்தின் சம்மர்கோர்ட்டில் வசித்துவரும் நபர் ஒருவரின் வீட்டில் கைறிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டெவோன் மற்றும் கார்ன்வால் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு வாசிகளையும் அப்புறப்படுத்தினர். அப்பகுதியின் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன.
வெடிகுண்டு நிபுணர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த பகுதியில் 50 மீட்டர் சுற்றுச்சுவர் போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த வாகனங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் உடமைகள் அகற்றப்பட்டன.பின்னர் அந்த நபரின் வீட்டினுள் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அலமாரிகளில் வெடி குண்டுகளை வைத்து அலங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
பின்னர் அந்த வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கையெறி குண்டுகளை அலங்காரத்திற்காக மட்டுமே வாங்கியதாகவும் அவை உண்மையான வெடிகுண்டு என்பது தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்.வீட்டில் இருந்த வெடிகுண்டுகளை மதிப்பிடுவதற்கு பிரித்தானிய கடற்படையின் வெடிகுண்டு அகற்றல் (EOD) குழு அழைக்கப்பட்டது. EOD என்பது வெடிபொருட்கள், அணுக்கரு போன்ற அபாயகரமான அல்லது அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளின் போது உயிரைப் பாதுகாப்பது, சொத்து அழிவைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பது போன்றவை ஆகும்.
இந்த வெடிகுண்டு அகற்றல் குழுவினர் 3 குண்டுகளை செயலிழக்கச் செய்து அப்புறப்படுத்திய பின்னர்தான் அந்த பகுதிவாசிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் அகற்றப்பட்ட பின்னர் வழக்கம் போல அந்த பகுதியில் இருந்த சாலைகள் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டன. வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறும் அபாயம் கொண்டவை என அறியாத வீட்டு உரிமையாளரின் செயல் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.