ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என அமைச்சரிடம் புகார் கூறிய இளைஞர்!

இளைஞரின் பதிவுக்கு அமைச்சர் அளித்துள்ள பதில்

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அமைச்சர் ராமா ராவ், ட்விட்டரில் தனது கவனத்துக்கு கொண்டு வரப்படும் கோரிக்கைகளையும், உதவி கேட்பவர்களுக்கும் உடனடியாக உதவுவதில் பேர் போனவர்.

  • Share this:
ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என இளைஞர் ஒருவர் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் 'கொஞ்சம் ஓவரா தாண்டா போறீங்க' என்று கூறும் அளவுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அவை சமூகத்திற்கு அளிக்கும் நன்மைகளை ஆபத்துக் காலங்களில் நன்றாகவே உணர முடியும். அதுவும் இந்த கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆக்ஸிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் வசதிகள் தேவையானவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. உதவி கோருவோரையும், உதவி அளிப்போரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் அமைந்துள்ளன.

ஆனால் சில நேரங்களில் இந்த சமூக ஊடகங்களை சிலர் வேடிக்கைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஒரு இளைஞர் தெரிந்து செய்த செயலா அல்லது தெரியாமல் செய்த செயலா என புரியவில்லை இருப்பினும் அவரின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கேடிஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கே.டி.ராமா ராவ். சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அமைச்சர் ராமா ராவ், ட்விட்டரில் தனது கவனத்துக்கு கொண்டு வரப்படும் கோரிக்கைகளையும், உதவி கேட்பவர்களுக்கும் உடனடியாக உதவுவதில் பேர் போனவர். இதன் காரணமாகவே தெலங்கானாவைச் சேர்ந்த சாமானிய மக்கள் அவரிடம் உதவி கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

உணவு வசதி ஏற்படுத்தித் தருவது, ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் கோரிக்கைகள் என பல உதவிகளையும் அமைச்சர் கே.டி.ஆர் செய்து தந்துள்ளார். சமீபத்தில் கூட ஒரு வீடில்லாத இளைஞரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பாராட்டு பெற்றார்.

அமைச்சரின் இந்த உதவும் குணத்தை அறிந்த இளைஞர் தொட்டகுரி ரகுபதி என்ற இளைஞர், அற்ப காரணத்திற்காக ட்விட்டரில் அமைச்சர் கே.டி.ஆரை டேக் செய்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இருப்பினும் அமைச்சர் அந்த இளைஞரின் பதிவுக்கு பதில் தந்திருப்பது சமூக வலைத்தளங்களில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.

இளைஞர் ரகுபதி தன்னுடைய ட்விட்டர் பதிவில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமோட்டோவில், கூடுதல் லெக் பீஸ் மற்றும் மசாலாவுடன் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் நான் கூறிய எதுவுமே கிடைக்கவில்லை. இது தான் நீங்கள் மக்களுக்கு சேவை செய்யும் முறையா?” என கூறியிருப்பதுடன் அதில் ஜொமோட்டோ நிறுவனத்தையும், அமைச்சர் கே.டி. ராமா ராவையும் டேக் செய்திருந்தார்.

அவர் தெரிந்து தான் இந்த பதிவை செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என புரியவில்லை இருப்பினும் ட்விட்டரில் இளைஞர் ரகுபதியின் பதிவைக் கண்ட அமைச்சர் ராமா ராவ் அவருக்கு பதில் அளித்திருக்கிறார்.

 “சகோதரரே என்னை இந்த பதிவில் எதற்காக டேக் செய்தீர்கள். இதில் நான் என்ன செய்ய முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்” என பதிலளித்துள்ளார்.

Read More:   கொரோனாவை குணப்படுத்தும் ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் ‘அதிசய’ மூலிகை மருந்து!

இளைஞர் ரகுபதியின் பதிவுக்கு அமைச்சர் பதில் அளித்ததும், அந்த இளைஞர் தன்னுடைய பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

 இருப்பினும் ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுத்த ட்விட்டர்வாசிகள் அவரை வச்சி செய்து வருகின்றனர்.
Published by:Arun
First published: