“அடேங்கப்பா, நம்ம ஊர்ல கரெண்ட் பில் எவ்வளவு ஜாஸ்தியா வருது பாருங்க, போற போக்கை பார்த்தால் ஃபேன், லைட் எதுவும் பயன்படுத்த முடியாது போல’’ என்று நீங்களும் ஏதோ ஒருநாள் சலித்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக உங்களுக்கு மட்டுமல்ல, உலகமெங்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அத்தியாவசிய தேவையாகிவிட்ட மின்சாரத்தை நாம் விட்டுத்தள்ளவும் முடியாது.
மின் கட்டணம் உயர்ந்தால், நம் வீட்டுப் பயன்பாட்டில் சிறிது மாற்றம் இருக்கலாம். அதாவது ஏசி, ஹீட்டர் போன்ற அதிக மின் தேவை கொண்ட சாதனங்களின் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்வோம். அதேபோல, தேவையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் லைட், ஃபேன் போன்றவற்றை உரிய கவனம் செலுத்தி ஆஃப் செய்து வைப்போம். ஆனால், ஒருநாளும் மின் இணைப்பை துண்டித்து விட வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.
ஏனென்றால், சாதாரணமாக ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே வீடுகளுக்குள் நம்மால் இருக்க முடிவதில்லை. ஒரு நாள் மின் விநியோகம் தடைபட்டால் நேரடியாக சாலைக்கு வந்து போராட தொடங்கி விடுவோம். ஆனால், மின் கட்டண உயர்வை காரணம் காட்டி, தாமாக முன்வந்து மின் இணைப்பையே துண்டித்திருக்கிறார் ஒருவர். ஆச்சரியமாக இருக்கிறதா? அதனால் தான், இன்றைக்கு உலகம் முழுவதிலும் உள்ள செய்திகளில் அவர் இடம்பிடித்திருக்கிறார்.
Also Read : மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்.. கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ
மின் இணைப்பை துண்டித்து விட்டார் என்றால், அவரது குடும்பம் 2 நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பியிருக்கிறது என்று அர்த்தம். பிரிட்டனில் இருந்து வெளிவரும் மெட்ரோ என்ற செய்தி நிறுவனத்தின் சார்பில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய நபரின் பெயர் சாவ்தார் டோடொரோவ். இவரது வீட்டுக்கான மின்கட்டணம் 320 யூரோ என்ற அளவில் வந்துள்ளது. அதாவது, மாதம் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.31,000 பில் வந்துள்ளது. மின் கட்டண செலவை குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த இவரது குடும்பம், ஒட்டுமொத்தமாக மின் இணைப்பையே துண்டித்துவிட்டது.
தற்போது டோடொரோவின் வீட்டில் அவரது மனைவி மோடா மற்றும் இரண்டு குழந்தைகள் அனைவரும், இரவில் வீட்டுக்குள் நடமாட ஹெட்டார்ச்களை பயன்படுத்தி வருகின்றனர். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நெற்றியில் கட்டிக் கொள்ளும் இந்த விளக்குகள் தான் அவர்களுக்கு வெளிச்சத்தை தருகிறது. இது தவிர அவ்வபோது மெழுகுவர்த்திகளையும் பயன்படுத்துகின்றனர்.
ஹெட்டார்ச் லைட்டுகளுக்கு வெளியிடங்களில் சார்ஜ் செய்ய மாதம் ஒன்றுக்கு ரூ.820 மட்டுமே செலவாகிறதாம். 4 லைட்டுகள் என்றாலும், ஏற்கனவே வந்த 31 ஆயிரம் பில்-ஐ ஒப்பிடுகையில் இது மிக, மிக குறைவு.
இதுகுறித்து மோடா கூறுகையில், “என் கணவர் முன்வைத்த யோசனையை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டோம். அதே சமயம், நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதால், அதிக வெளிச்சமற்ற எங்கள் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தோன்றும். ஆனால், மெழுகுவர்த்தியை பயன்படுத்துகிறபோது வீட்டில் ஒரு ரொமான்ஸ் உணர்வு தென்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.