ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க அடுத்தடுத்து தொடர்ச்சியாக பொய் சொல்ல வேண்டி வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு குற்றத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்றொரு குற்றத்தை செய்து, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.
மத்திய லண்டன், கெங்சிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஸோ பெர்னார்டு. இவருக்கு 38 வயது ஆகிறது. கில்பர்ன் என்னும் நகர் அருகே, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டியை தாறுமாறாக ஓட்டி வந்தார் இந்தப் பெண். இதையடுத்து, காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரது வாகனத்திற்கு இன்சூரன்சும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், ஸோ பெர்னாடுவை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். ஆனால், இந்த சமயத்தில் தான் ‘நான் அவன் இல்லை’ என்ற படத்தில் வருவதைப் போல பேசத் தொடங்கினார். அதாவது, சானைஸ் பெர்னார்டு என்ற பெயரில், நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தனது சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இறப்புச் சான்றிதழுக்கும் அவர் விண்ணப்பம் செய்திருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தன்னை கெய்சா பெர்னார்டு என்ற பெயரில் அவர் அறிமுகம் செய்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக பெயர் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதமாகியது.
Also Read : ஒரே நாள் இரவில் 20 ஆண்டுகால நினைவுகளை மறந்த பெண்
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரி கூறுகையில், “விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பெர்னார்டுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அப்போது 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரையில், பல சந்தர்பங்களில் என்னை தொடர்பு கொண்டு பேசிய பெண், தன்னை சானிஸ் பெர்னார்டு என அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடைய சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாகக் கூறினார்’’ என்று தெரிவித்தார்.
Also Read : பிச்சை எடுத்து வாழ்ந்த பெண் இறந்த பிறகு காத்திருந்த அதிர்ச்சி.!
வழக்கறிஞரின் வாதம் நிராகரிப்பு
இறுதியாக ஸோ பெர்னார்டு என்ற ஒரே பெண் தான், பல ரூபங்களில் விளையாடி வருகிறார் என்பதை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் அவரை காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். அப்போது, அவரது தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், “காவல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் ஸோ பெர்னார்டு. மேலும், அவருக்கு சிக்கில் செல் என்னும் நோய் உள்ளது. எனவே, அவருக்கான தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். தற்கொலை எண்ணத்தில் இருந்ததால் தான் அவர் சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்’’ என்று கூறினார்.
ஆனால், இந்த வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு கொஞ்சம் கூட அவர் மதிப்பளிக்கவில்லை எனக் கூறி குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.