நீங்கள் ஒரு புத்தகப் பிரியர் என்றால், நிச்சயமாக உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும். அதாவது, வாடிக்கையாக நூலகம் சென்று உங்கள் மனதுக்கு பிடித்தமான புத்தகத்தை எடுத்து வரும் பழக்கம் இருந்தாலும், உரிய காலத்தில் அதை படித்து முடிப்பதற்கான நேரமின்மை மற்றும் கடைசி தேதிக்குள் புத்தகத்தை திருப்பி அளிக்க முடியாமல் கால தாமதம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பீர்கள்.
சில சமயம், புத்தகத்தை தொலைத்துவிட்டு நூலகத்திற்கு அபராதம் கட்டும் நபர்களும் உண்டு. அதே நேரம் ஒரு வாரம் அல்லது ஓரிரு மாதங்கள் தாமதமாக புத்தகங்களை திருப்பி ஒப்படைத்து விட்டு அபராதம் கட்டும் நபர்களையும் பார்த்திருப்போம்.
இது எல்லாவற்றையும் விட ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இந்தத் தகவல் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் நூலகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன் என்ற கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், புத்தகத்தை பார்சல் மூலமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
பழங்கால புத்தகத்துடன், குறிப்பு ஒன்றையும் அந்த நபர் அனுப்பி வைத்துள்ளார். அதில், “அன்பார்ந்த நூலகப் பணியாளரே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் புத்தகம் திருப்பி கொடுக்கப்படாமல் இருக்கும் என நான் நினைக்கிறேன். தயவுசெய்து, அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது நீண்ட காலத்திற்குப் பிறகு, கடும் சிரமங்களுக்கு இடையே இதை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறேன். தற்போது சூழலில், இது ஒரு ‘பழங்கால புத்தகம்’ என்ற பெருமையை பெற்றிருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் யுனிவெர்சிட்டி காலேஜ் நூலகத்தில் இருந்து பெறப்பட்ட இந்தப் புத்தகத்தை 1974ஆம் ஆண்டு கோடைகால பருவத்தில் திருப்பி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட்டதற்காக அதன் மீது 1,254 பவுண்டுகள் (ரூ.1.2 லட்சம்) அபராதம் விதிக்கலாம். ஆனால், புத்தகத்தை அனுப்பியவர் யார் என்ற அடையாளம் தெரியாததால் அபராதம் வசூலிக்க வழியில்லை.
Also Read : இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க? அமெரிக்க விமான நிலையத்தில் அதிர்ச்சி!
நிரந்தரமாக கடன் வாங்கப்பட்ட இந்தப் புத்தகம் கடந்த 1875ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது ஆகும். புத்தகத்தின் பெயர் ‘குயர்லோஸ்’ (Querolus) ஆகும். இதே காலகட்டத்தில் வெளியான பிளேடஸ், டெரென்ஸ் மற்றும் செனேகா போன்ற புத்தகங்களுக்கு போட்டியாக வெளியான, ரோமானிய மொழியில் படைக்கப்பட்ட கதை புத்தகம் இதுவாகும்.
Also Read : மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்
புத்தகத்தை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அப்பாவி ஏழை மனிதர் ஒருவரை, மாயாஜால வித்தைக்காரர் ஒருவர் எப்படி ஏமாற்றுகிறார் என்பதை விவரிப்பதாக இந்தப் புத்தகத்தின் கதை அமைந்துள்ளது. தற்போது, அனுப்பி வைக்கப்பட்ட புத்தகத்துடன், கனிவுடன் எழுதப்பட்ட குறிப்பு என்பது, கால தாமதம் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தை கைவிடச் செய்வதாக அமைந்துள்ளது என்று நூலகர் சுஸானே டிராவ் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.