குஜராத் மாநிலம் ஜுனகத் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சரோவர் போர்டிகோ எனும் ஹோட்டல் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சிங்கம் ஒன்று நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை ட்விட்டர் யூசர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஹோட்டல் சரோவர் போர்டிகோவுக்குள் சிங்கம் நடந்து செல்வதைக் காட்டும் தொடர்ச்சியான சிறு கிளிப்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கம் பார்க்கிங் இடத்தை சுற்றி நடந்து, பின்னர் ஹோட்டலின் வளாகத்தை சுற்றி உலா வந்தது. சிறிது நேரம் கழித்து, சிங்கம் சுவர் மீது பாய்ந்து ஹோட்டலுக்கு வெளியே சென்றது. ஹோட்டல் வளாகத்தை சுற்றி வந்த சமயம், ஹோட்டலின் பாதுகாவலர் பிரதான வாயிலில் தனது அறையில் திகிலுடன் அமர்ந்திருந்தார். மேலும், சில நிமிடங்கள் கழித்து பிரதான சாலையில் சிங்கம் நடந்து செல்வதைப் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், கடந்த திங்கள்கிழமை அன்று அதிகாலை 5.04 மணியளவில் நடந்துள்ளது. அந்த சிங்கம் சுமார் ஒரு நிமிடங்கள் மட்டுமே ஹோட்டல் வளாகத்தில் இருந்ததாகவும், பின்னர் நுழைவாயில் கேட்டில் குதித்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், "ஜுனகத் நகரில் சிங்கங்கள் வருவது இப்போதெல்லாம் ஒரு வழக்கமான விஷயம்" என்று இந்த வீடியோவை வெளியிட்ட ட்விட்டர் யூசர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ கிளப்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lions in the city of Junagadh is a regular affair nowadays. @ParveenKaswan @susantananda3 @CentralIfs pic.twitter.com/o2PtLiXmui
— Udayan Kachchhi (@Udayan_UK) February 10, 2021
இந்த சம்பவம் குறித்து ஜுனகாட்டில் உள்ள சரோவர் போர்டிகோ ஹோட்டலின் நிர்வாக பங்குதாரர் சஞ்சய் கொராடிய, “சிங்கம் ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைந்தபோது பிரதான வாயிலில் இருந்த பாதுகாவலர் எச்சரிக்கையாக இருந்தார். மேலும் அமைதியை கடைபிடித்தார். இண்டர்காம் மூலம், ஹோட்டலில் விலங்கு இருப்பதைப் பற்றி மற்ற ஊழியர்களை எச்சரித்த அவர், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். சி.சி.டி.வி காட்சிகளை பார்க்கும் போது சிங்கம் தனது வழியை தவற விட்டிருக்கலாம். அது தவறான திசையில் செல்வதைக் கண்டறிந்தவுடன் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறினார்.
மேலும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. சிங்கம் எங்கள் வளாகத்திற்குள் நுழைந்த நேரத்தில் எங்கள் ஹோட்டலில் நிறைய விருந்தினர்கள் இருந்தனர். இருப்பினும், சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் அறைகளிலேயே இருந்தனர்”என்று தெரிவித்தார். கடந்த 2019 செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்ட இந்த ஹோட்டல், ஜுனகத் நகரின் மையப்பகுதியில் பரபரப்பான ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலில் விலங்கினை பார்த்த உடனேயே, ஹோட்டல் அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் ஹோட்டலுக்கு வருகை தந்த வனத்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக ஜுனகத் பிராந்திய வனப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் (DCF) சுனில் பெர்வால் கூறியதாவது, "இதுபோன்று அப்பகுதியில் அடிக்கடி சிங்கம் நுழைவது சாதாரணமாகி விட்டது. ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகிய பின்னர்தான் அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்கள் சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளை சரிபார்த்து சிங்கத்தின் காட்சிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்" என்று கூறினார்.
ஜுனகத் நகரம் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தின் (GWLS) எல்லையில் அமைந்துள்ளது. இது ஒரு மலைப்பாங்கான காடு மேலும் இந்த இடம் சில டஜன் ஆசிய சிங்கங்களின் தாயகமாக இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளில் பெரிய பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜுனகத் மத சுற்றுலாவின் முக்கிய மையமாகவும், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் நகரத்தின் மிக உயரமான சிகரமான கிர்னார் மலையை ஏற ஒவ்வொரு ஆண்டும் பல வருகிறார்கள். இதனாலேயே நகரத்தில் புதிய ஹோட்டல்கள் அதிகம் முளைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asiatic lions, CCTV, CCTV Footage, Gujarat, Lion