போலியான செய்திகள், போலியான வீடியோக்கள் அல்லது மடைமாற்றம் செய்து திரித்துக் கூறப்படும் விஷயங்கள் என பல தரப்பட்ட விஷயங்களும் நிரம்பியவை தான் இந்த சமூக வலைத்தளங்கள். இங்கு வரும் பல பதிவுகள் நம் கண்ணை மறைத்து விடும். அதாவது சந்தேகத்திற்கு இடமின்றி நம்பும்படியாக இருக்கும். அதை நம்பி நாம் அதை ஷேர் செய்யப் போக, அதை போலி என வலைதள நண்பர்கள் நிரூபிக்கையில் நாம் அசடு வழிந்து நிற்போம்.
சாமானிய மக்கள் மட்டும் தான் இதுபோல போலி பதிவுகளை நம்பிவிடுவார்கள் என்றில்லை. மக்களால் நன்கு அறியப்பட்ட பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதிலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, முன்னாள் கவர்னர் என்ற அடையாளங்களைக் கொண்ட கிரண் பேடியும் கூட இந்தப் போலி என்ற வலையில் சிக்கிவிட்டார்.
டிவிட்டரில் வீடியோ பகிர்வு
டிவிட்டரில், “இதைப் பாருங்கள்’’ என்ற தலைப்புடன் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டார் கிரண் பேடி. அதாவது, அந்த வீடியோ உண்மையானது, அது ஆச்சரியம் அளிக்கிறது என்ற தோனியில் அவரது பதிவு இருந்தது. வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த தலைப்பில், “ இந்தக் காட்சிக்காக நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் 1 மில்லியன் டாலர் கொடுத்தது. என்ன ஒரு வீடியோ’’ என்ற அறிமுகத்துடன் வீடியோ பிளே ஆகிறது.
அந்த வீடியோவில், கடல்பகுதியில் தாழ்வாக பறந்து வரும் ஹெலிகாப்டர் ஒன்றை, திமிங்கலம் ஒன்று துள்ளி எழுந்து விழுங்குவதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. உண்மையில் இது கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியான ‘5 Headed Shark Attack’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வெளியாகிருந்த காட்சியாகும்.
இந்த சம்பவம் நிஜத்தில் நடந்ததைப் போலவே கதை எழுதி, கில்லாடி நெட்டிசன்கள் ஏற்கனவே பலமுறை வைரல் செய்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் ‘ஃபேக்ட் செக்’ (உண்மை பரிசோதனை) நிறுவனங்கள் அதை போலி என நிரூபனம் செய்திருக்கின்றன. பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்க, அதை ஏதேச்சையாக ஷேர் செய்த கிரண் பேடியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்திருக்கின்றனர்.
Also Read : ரூ.12,000 பட்ஜெட்டில் 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த பெங்களூரு நபர் - எப்படி சாத்தியமானது.?
நெட்டிசன்களின் ட்ரோல் கமெண்ட்
இணையத்தில் வரும் அனைத்தையும் உண்மை என்று எங்கள் அப்பா தான் நம்புவார் என நினைத்திருந்தேன். ஆனால், பெரிய தலைவர்களும் கூட அப்படித்தான் போல என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பாரீஸ் நகரில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் படத்தை பதிவிட்டு, இது எங்கள் ஊர் கோவையில் உள்ள ஏர்டெல் டவர், இது ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டது என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
இதேபோல கிரண் பேடியின் பதிவுக்கு சர்காஸ்டிக் கமெண்ட்களை நெட்டிசன்கள் வாரி இரைத்திருக்கின்றனர். எந்தவொரு பதிவையும் பகிரும் முன்பாக நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இது நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.