எந்தவொரு நிகழ்ச்சியானாலும் விருந்தினர்களை குதூகலப்படுத்த ஏதாவது ஒரு வேடிக்கையை நாம் நிகழ்த்துவது வழக்கம். உதாரணத்திற்கு ஒரு திருமண விழாவை எடுத்துக் கொள்வோம். இந்த விழாவில் பொதுவாக பலரும் நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவது உண்டு. சில சமயம், மணமக்களிடையே கேளிக்கை நிறைந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது உண்டு.
இப்போதெல்லாம் பிறந்தநாள் விழாவிலும் கூட பலர் வேடிக்கையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். சில சமயங்களில், ‘ஓவர் டோஸ்’ ஆகி இந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் விபரீதங்களில் முடிவடைவதும் உண்டு. அத்தகைய நிகழ்வு ஒன்று சமீபத்தில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் நடைபெற்றிருக்கிறது.
குழந்தைகளை மையப்படுத்தி வேடிக்கை
சின்ன வயது குழந்தைகளுக்கு பிரமிப்பூட்டுவதற்காக பொதுவாக நாம் சிங்கம், புலி, டைனோசர் போன்ற விலங்கு கதைகளை நாம் சொல்வது வழக்கம். குழந்தைகள் அதை அச்சமும், ஆச்சரியமும் கலந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், சிங்கம், புலி பொம்மைகளைக் கண்டால் கூட பயந்து நடுங்கி விடுவார்கள்.
Also Read : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண்
இந்த சம்பவத்திலும் அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த குழந்தைகளை குதூகலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் டைனோசர் வேடமணிந்த ஒரு நபரை திடீரென நிகழ்ச்சி அரங்கிற்குள் கூட்டி வந்தனர். டைனோசரை குழந்தைகள் ஆச்சரியமாக பார்க்கக் கூடும் என்று பெரியவர்கள் கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால், நடந்த சம்பவம் அதற்கு நேர் மாறானதாக ஆகிவிட்டது. ஆம், டைனோசர் நபரை கண்ட குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு, அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கிவிட்டன.
சமூக வலைதளங்களில் வைரல்
விளையாட்டும், விபரீதமும் கலந்த இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோவை, பயனாளர் ஒருவர் டிக்டாக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய அது வைரல் ஆகிவிட்டது. டிவிட்டரில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
சிரிப்பும், கண்டனமும்
வைரல் வீடியோவைப் பார்த்து எண்ணற்ற நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எதிர்பாராத நிலையில் திடீரென வந்த டைனோசரைக் கண்டு அலறி ஓடும் குழந்தைகளை பார்க்கும்போது சிரிப்பு வருகிறது என்பதை பலர் ஸ்மைலி ரியாக்ஷன் மூலம் வெளிப்படுத்தினர்.
அதே சமயம், குழந்தைகளை துன்புறுத்தி, அதைப் பார்த்து சிரிப்பதா என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல விளையாட்டு விபரீதமான நிகழ்வு ஒன்றை மற்றொரு பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார். பிறந்தநாள் விழாவை சாகசம் நிறைந்ததாக மாற்றும் பொருட்டு, மச்சினியின் யோசனைப்படி, காமிஸ் கதைகளில் வரும் வில்லனைப் போல வேடமணிந்து சென்றதாகவும், அதைப் பார்த்து குழந்தைகள் அலறிய நிலையில், 3 குழந்தைகளை அவர்களது பெற்றோர் பாதியில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.