நடிகர் சிவாஜி கணேசன், நடிகை சரோஜா தேவி ஆகியோரது நடிப்பில் கடந்த 1963ஆம் ஆண்டில் வெளியானது ‘இருவர் உள்ளம்’ என்ற திரைப்படம். இந்தப் படத்தில், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் ஆகியோரது படைப்பில், அப்போதைய காலகட்டத்தில் செம ஹிட் அடித்த பாடல், “பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’’ என்ற பாடலாகும்.
சரி இந்தப் பாடலுக்கும், இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம் என தோன்றுகிறது. ஒரு சம்பந்தபமும் இல்லை என்றாலும் கூட, “பறவைகள் பல விதம் என்பதைப் போல, பிரச்சினைகளும் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
என்னதான் கடமையே கண்ணாக நீங்கள் பணியாற்றினாலும், எங்கிருந்தோ ஒரு பிரச்சினை, ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை தேடி வரும் என்பதற்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
பேருந்துகளில் எடுத்துச் செல்லப்படும் கோழி, ஆட்டுக்குட்டி போன்றவற்றுக்கு நடத்துநர்கள் டிக்கெட் வழங்கும் நிகழ்வுகள் ஒன்றிரண்டை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்வி பட்டிருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட பலா பழம் மற்றும் கேஸ் ஸ்டவ் போன்றவற்றுக்கு, லக்கேஜ் டிக்கெட் ஏன் வழங்கவில்லை என விளக்கம் கேட்டு இரண்டு நடத்துநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் கேஸ் ஸ்டவ்வுடன் பெண் ஒருவர், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறினார். அந்த அடுப்பு சுமார் அரை கிலோ மட்டுமே எடை இருக்கும். அதற்கு அவர் லக்கேஜ் டிக்கெட் வாங்கவில்லை. இந்நிலையில், பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அந்தப் பெண் தனக்கான டிக்கெட் மட்டுமே வைத்துள்ளார் என்பதையும், கேஸ் ஸ்டவ்வுக்கு லக்கேஜ் டிக்கெட் பெறவில்லை என்பதையும் கண்டறிந்தார். நடத்துநர் கோரக்நாத் தனது கடமையைச் செய்ய தவறி விட்டதாகக் கூறிய அந்தப் பரிசோதகர், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்.
Also read... 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஆர்ட்வார்க் குட்டி... செல்லப்பெயர் என்ன தெரியுமா?
மற்றொரு சம்பவத்தில் சாதாரண பலா பழம் ஒரு நடத்துநரை பிரச்சினையில் கொண்டுவந்து விட்டுள்ளது. அரசிகேரீ என்ற பகுதியில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட பலா பழத்துடன், அரசுப் பேருந்தில் பயணித்தார். இங்கேயும் டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்தபோது, பலா பழத்திற்கு லக்கேஜ் டிக்கெட் வசூல் செய்யாத நடத்துநர் ரகுவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இந்த சின்ன பொருளுக்கு, அதுவும் பழத்துக்கு போய் டிக்கெட் வசூல் செய்ய முடியாது என்று ரகு எவ்வளவோ வாதாடியும், பரிசோதகர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஒழுங்கு நடவடிக்கை கோரும் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் சேவல் கோழியுடன் பேருந்தில் வந்த நபரிடம் லக்கேஜ் டிக்கெட் வசூல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.