ஜிலேபி பலரும் விரும்பிச் சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று. வட மாநிலங்களில் ஜிலேபியை காலை உணவாக சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இந்தியாவின் தேசிய இனிப்பாகவே கருத்தப்படுகிறது ஜிலேபி. திகட்டாத தித்திப்பு, லேசான புளிப்புச் சுவையுடன் சுடச்சுடச் ஜிலேபி சாப்பிடுவது பலராலும் விரும்பப்படுகிறது. வெளிர் பச்சை, சிவப்பு என்று வண்ணங்கள் சேர்த்து செய்யப்பட்டாலும், பளபளப்பான ஆரஞ்சு நிறத்தில் காண்போரை ஈர்க்கும் ஜிலேபியில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
இந்தியாவில் 9 வகை ஜிலேபிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை ஜிலேபிக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜாங்கிரி
பொதுவாக ஜிலேபி மைதா மாவில் செய்யப்படும். ஆனால், நாடு முழுவதும் பிரபலமான ஜாங்கிரி, உளுந்து மாவில் செய்யப்படுகிறது. ஜிலேபியை விட அதிக இனிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலான ஜிலேபி வகைகளில் ஜாங்கிரி முக்கியமானது.
பனீர் ஜிலேபி
வழக்கமாக செய்யும் ஜிலேபியில் பனீர் சேர்த்து செய்யப்படுவது பன்னீர் ஜிலேபி ஆகும். பனீர் ஜிலேபிக்கு ஃபிரெஷ்ஷாக முழு கொழுப்பு பாலிலிருந்து பனீர் தயாரிக்கப்படுகிறது. பனீர் இனிப்புகளுக்கு பெயர் பெற்ற மேற்கு வங்காளத்தில், பனீர் ஜிலேபி மிகவும் பிரபலமான இனிப்பாகும்.
Also Read : கார பணியாரம், ஸ்வீட் பணியாரம் சாப்புட்டிரூப்பீங்க.... ஃப்ரூட் பணியாரம் சாப்புட்டிரூக்கீங்களா?
கருப்பு ஜிலேபி
மைதா மாவுக்கு பதிலாக, உருளைக்கிழங்கு மற்றும் கோயாவில் செய்யப்படுவது கருப்பு ஜிலேபி ஆகும். உருளைக்கிழங்கு மற்றும் கோயாவை சரியான கலவையில் சேர்ப்பது கருப்பு நிறத்தை அளிக்கும். காலா ஜாமூன் என்பது போல காலா ஜிலேபி என்பதும் பழைய டெல்லியில் பிரபலமான ஜிலேபி வகையாகும்.
ஜலீபா
ஜலீபா என்பது அதிக கொழுப்புள்ள, அதிக கலோரி கொண்ட ஜிலேபி வகையாகும். ஜிலேபி மாவை நன்றாக புளிக்க வைத்து, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும்.ஜிலேபின் மேல் கிரீம், மலாய் ஆகியவை சேர்த்து வழங்கப்படும். வழக்கமான ஜிலேபியை விட இது அளவில் பெரிதாக இருக்கும்.
கோயா ஜிலேபி
மைதா மாவுடன், கோயா அல்லது கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து செய்யப்படும் கோயா ஜிலேபி மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமாகும். இந்த ஜிலேபியின் மேல் மலாய் அல்லது சில்லென்று பால் ஊற்றி பரிமாறப்படும்.
உளுந்து ஜிலேபி
ஜாங்கிரிக்கும் இந்த ஜிலேபிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஜாங்கிரி இனிப்பாக இருக்கும், இந்த உளுந்து ஜிலேபி புளிப்பாக இருக்கும். உளுந்து மாவு நன்றாக புளிக்க வைக்கப்பட்டு ஜிலேபி தயாரிக்கப்படும்.
Also Read : ருசியான மசாலா இட்லி செய்முறை!
இமார்டி
உளுந்து மாவில், மக்கா சோள மாவு மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்யப்படும் இமார்டி, மற்ற ஜிலேபிகளை விட அடர்த்தியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு ஜிலேபி
வெறும் உருளைக்கிழங்கை வேக வைத்து, கொஞ்சம் மைதா மற்றும் நெய் சேர்த்து செய்யப்படுவது இந்த வகை ஜிலேபி ஆகும்.
ஆப்பிள் ஜிலேபி
எல்லா இனிப்பு வகைகளிலும் பழங்கள் சேர்த்து செய்வது அல்லது பழச்சாறை சேர்ப்பது புதிய டிரெண்டாக உள்ளது. ஜிலேபில் ஆப்பிள் துண்டுகள் சேர்க்கப்பட்டு பொறித்து சர்க்கரைப் பாகில் சேர்க்கப்படும்.
கார ஜிலேபி
ஜிலேபி என்றாலே இனிப்பு தானா என்ற கேள்விக்கு விடையாக பாப்ரா என்ற கார வகை ஜிலேபி உள்ளது. அரிசி மாவு, கடலை மாவு மற்றும் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து செய்யப்படும் இந்த ஜிலேபி மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.