• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஜல்லிக்கட்டு போன்று பன்றி தழுவும் விசித்திர போட்டி... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

ஜல்லிக்கட்டு போன்று பன்றி தழுவும் விசித்திர போட்டி... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

பன்றி தழுவும் போட்டி

பன்றி தழுவும் போட்டி

சுமார் 70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர்.

  • Share this:
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ளது குறமகள் வள்ளிநகர் குடியிருப்புப் பகுதியில், வன வேங்கைகள் கட்சி சார்பாக  பன்றி தழுவும் போட்டியை நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேனியில் நடைபெற்ற பன்றி தழுவும் போட்டி  அனைவரையும் ஆச்சர்யத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

தேனி அல்லிநகரம் அருகே உள்ள வள்ளி நகர் பகுதியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வன வேங்கைகள் கட்சி சார்பில் இப்பகுதியில் பன்றி தழுவும் போட்டியை நடத்தினர். இந்தப் போட்டிக்கு என சில விதிமுறைகளையும் வைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பன்றிகள் வெளியே செல்ல முடியாதவாறு நான்கு புறமும் தடுப்பில் ஹால் அடைக்கப்பட்ட மைதானம் தயார் செய்யப்பட்டது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 பன்றிகள் மற்றும் இளைஞர்களும்  போட்டிகளில் பங்கேற்றனர். சுமார் 70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர். வாடிவாசல் போன்ற ஆரம்பக்கோட்டில் இருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றிகள் மூன்று அடி தொலைவில் போடப்பட்டுள்ள கோட்டைக் கடந்த பின்னர், மைதானத்தில் இருக்கும் மூவர், பன்றியைப் பிடிக்க முயற்சிப்பார்கள்.

அதில் ஒருவர் மட்டுமே பன்றியைப் பிடிக்க வேண்டும். அதாவது பன்றி எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடித்து நிறுத்த வேண்டும். அவ்வாறு பன்றி நகரவிடாமல் பிடித்து நிறுத்திய வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். வீரர்களிடம் பிடிபடாமல் எல்லைக்கோட்டை கடந்தால் பன்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆக்ரோஷமாக ஓடி வரும் பன்றிகளை பிடித்து நிறுத்துவது வீரர்களுக்கு சவாலாகவே இருந்தது.



பன்றி தழுவும் போட்டியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வீரர்களிடம் பிடிபடாத பன்றி உரிமையாளருக்கும், திறமையாக பன்றிகளை பிடித்து நிறுத்திய வீரர்களுக்கும் நினைவு  பரிசுகள் வழங்கப்பட்டது.

பன்றி தழுவும் போட்டி குறித்து வனவேங்கைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் உலகநாதனிடம் கூறுகையில். “விவசாயத்தில் உழவிற்கு காளை மாடுகள் பயன்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், சங்க கால குறிஞ்சி நிலத்தில் விவசாய உழவிற்கு பன்றிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஆதாரம் புறநானூற்றில் பாடான் திணையில் உள்ளது. இதனை மையமாக வைத்து தான் பன்றி தழுவும் போட்டியை நடத்தினோம்.

சங்க கால குறிஞ்சி நில மக்களின் நினைவாகவே தேனி மாவட்டத்தில் முதல் முறையாக  பன்றி தள்ளவும் போட்டியை நடத்தியுள்ளோம் அடுத்த பொங்கல் பண்டிகையில் அதிக அளவு பன்றிகள் வரவழைக்கப்பட்டு படு விமர்சியாக போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: