ஊரடங்கை மீறினால் ’மசக்களி 2.0’ பாடலைக் கேட்க வேண்டும் - ஜெய்ப்பூர் காவல்துறையின் வித்தியாசமான எச்சரிக்கை!

மசக்களி 2.0

டெல்லி மெட்ரோ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், மசக்களி அசல் பாடலுக்கு வேறு எந்த ரீமிக்சும் ஈடாகாது எனக் குறிப்பிட்டு அப்பாடலைப் பகிர்ந்தது.

  • Share this:
பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாலிவுட் படம் ’டெல்லி 6’. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கி இந்தப் படம், பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றபோதிலும், பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில், இடம்பெற்ற மசக்களி என்ற பாடல் இன்றும் பலருடைய பிடித்தமான பாடல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி 6 பாடல்களின் உரிமை டி-சீரிஸ் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது மர்ஜாவன் என்ற படத்துக்காக மசக்களி பாடலை ரீமிக்ஸ் செய்து அந்தப் பாடலின் வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன் டி-சீரிஸின் யூடியூப் சேனலில் வெளியிட்டனர். ஆனால், மசக்களி ரீமிக்ஸ் பாடலுக்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

"கொரோனாவை விட கொடுமையானது மசக்களி 2.0" போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் இணையத்தில் பகிரப்பட்டன. இதனால், ட்விட்டரில் மசக்களி 2.0 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைத்த தனிஷ்க் பாக்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

பொதுவெளியில் எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தாத, குறைவாகப் பேசக்கூடிய ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டரில், ரீமிக்ஸ் பாடலுக்கு தனது அதிருப்தியைப் பதிவிட்டார். அத்தோடு, அந்தப் பாடலின் ஒரிஜினலை கேட்டு மகிழுங்கள் என்று மசக்களி பாடலின் வீடியோ லிங்க்கையும் பதிவிட்டிருந்தார்.

அதேபோல், அந்தப் பாடலுக்காக அவருடன் பணியாற்றிய பலரும் தம் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

இதில், ஜெய்பூர் காவல்துறை ஒருபடி மேலே சென்று, மசக்களி 2.0 ரீமிக்ஸ் பாடலை ட்ரோல் செய்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே நடமாடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் காவல்துறையினர் விதவிதமான விசித்திரமான தண்டனைகளை வழங்கி வரும் நிலையில், வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றுபவர்களுக்கு மசக்களி 2.0 ரீமிக்ஸ் பாடலை தொடர்ச்சியாக கேட்க வைத்து தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது இணையத்தில் வைரலானது.

அதேபோல், டெல்லி மெட்ரோ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், மசக்களி அசல் பாடலுக்கு வேறு எந்த ரீமிக்சும் ஈடாகாது எனக் குறிப்பிட்டு அப்பாடலைப் பகிர்ந்ததோடு, இப்படி பகிர்வதில் எங்களுக்கும் ஒருபக்கச் சார்பு உள்ளது என தன் பங்கிற்கு ட்ரோல் செய்தது இணையத்தில் கொரோனாவை போல் இணையத்தில் வேகமாகப் பரவியது.


Also see:
Published by:Rizwan
First published: