கலைத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் அளவீடுகளே இருக்க முடியாது. சில சமயம் எதையாவது பிரம்மாண்டமாக செய்து பார்வையாளர்களை பிரமிக்க வைப்பார்கள். சில சமயம் மிக, மிக சிறிய அளவிலான பொருளை உருவாக்கி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்கள். உதாரணத்திற்கு கடற்கரை பக்கமாக சென்றால் அங்கு சங்குகளில் நம் பெயரை எழுதித் தருகின்ற கலைஞர்களை நிறையவே பார்க்க முடியும். அதிலும், அரிசியில் நம் பெயரை நுணுக்கமாக எழுதித் தருகின்ற திறமை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி ஒருவர் இதைவிட ஆச்சரியம் மிகுந்த சாதனை ஒன்றை நிகழ்த்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
நவரத்தன் பிரஜாபதி முர்திகார் என்ற இந்த கலைஞர் உருவாக்கியுள்ள மர ஸ்பூனில் உலகில் யாருமே சாப்பிட முடியாது என்று உறுதியாக சொல்லலாம். அவ்வளவு ஏன், அதை நீங்கள் கையால் பிடிப்பது கூட சிரமம் தான். காரணம் ஒரு அரிசியை காட்டிலும் நீளம் குறைவான மர ஸ்பூன் ஒன்றை இவர் வடிவமைத்துள்ளார். அதாவது ஒரு முழு சோற்று பருக்கையை எடுத்து வைத்தீர்கள் என்றால் அந்த ஸ்பூன் தாங்காது. இவரது சாதனை குறித்து, உலக கின்னஸ் சாதனை அமைப்பின் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரஜாபதி தயாரித்துள்ள ஸ்பூனின் அளவு என்பது 2 மி.மீ. அளவு கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 0.07 இன்ச் நீளம் கொண்டதாகும்.
New record: Smallest wooden spoon - 2 mm (0.7 inches) made by Navratan Prajapati Murtikar (India) 🥄 pic.twitter.com/wrFltImEPf
— Guinness World Records (@GWR) January 19, 2023
ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை எண்ணற்ற மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இது எப்படி சாத்தியமானது என்று பலரும் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைத்த பிரஜாபதி, மார்பிள் சிலைகளை செய்யும் சிற்பி ஆவார். மிக, மிக சிறிய கலைப்பொருட்களை உருவாக்குவதுதான் தமது நோக்கம் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பிரஜாபதி கூறுகையில், “கின்னஸ் உலக சாதனை என்பது சாதனைகளுக்கான கோஹினூர் வைரம் போன்று மதிப்பு கொண்டது. ஆக, இந்த சாதனை அங்கீகாரம் கிடைத்ததன் மூலமாக என் தலையில் சிறப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்பட்டதை போல உணருகிறேன்’’ என்று தெரிவித்தார்.
உலகை சுற்றி வந்து சாதனை
அண்மையில் உலகில் உள்ள 7 கண்டங்களையும் 73 மணி நேரத்தில் கடந்து வந்து இந்தியர்கள் இருவர் கின்னஸ் சாதனை படைத்தனர். அதற்கு முன்பு 3 நாட்கள் 1 மணி நேரம், 5 நிமிடங்கள் மற்றும் 4 நொடிகளில் உலகை வலம் வந்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்நிலையில் மருத்துவர் அலி ஹுசைன் இராணி மற்றும் சுஜோய் குமார் ஆகியோர் அந்த சாதனையை முறியடித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.