எவ்வளவு சம்பளம், எவ்வளவு சொத்து என்ற பேச்சு வரும்போதெல்லாம்,‘ஒரு கோடிப்பே’, ஒரு கொடியா என்ற காட்சியும் வசனமும் கண்டிப்பாக நினைவில் வந்து போகும். ஆனால், ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும், அந்த நபர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஐரிஷ் ரயில் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். ஆனால் அவருக்கு வேலையே இல்லையாம். அதனால் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
டுப்ளின் நகரில் உள்ள ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார், டெர்மாட் அலஸ்டைர் மில்ஸ். ஆனால், இவர் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பற்றி ஏதோ கருத்து தெரிவித்ததால், அவரை பணியில் இருந்து நீக்காமல், நிறுவனத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்களாம். வேலை செய்யாமல் ஒதுங்கி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஊழியர் தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு மில்ஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மில்ஸ் நிறுவனத்தில் நடக்கும் ஏதோ முக்கிய விஷயத்தை வெளியிட்டிருக்கிறார் என்று நிறுவனம் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. அதாவது அவர் என்ன செய்திருக்கிறார் அல்லது தவறை சுட்டிக்காட்டி இருக்கிறாரா என்பதைப் பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர் செய்தவற்றுக்காக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.
மில்ஸ் அப்படி என்னதான் செய்தார் என்பது அனைவருக்குமே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! இதைப்பற்றி மில்ஸ் கூறுகையில், 2010 ஆம் ஆண்டு இவருக்கு பதவி உயர்வு கிடைத்தது என்றும், அதற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு சக ஊழியர்களால் கேலிக்குள்ளாக்கப் பட்டதால் மூன்று மாதம் தொடர்ந்து விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். மூன்று மாத விடுப்புக்கு பிறகு பணிக்கு திரும்பிய மில்ஸ்க்கு நிறுவனம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூறியுள்ளது.
எந்த வேலை செய்துள்ளாரோ அதே பணி, அதே சீனியாரிட்டி மற்றும் அதே சம்பளம்தான் வழங்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை மில்ஸ் எதுவுமே செய்யாமல், எதுவுமே செய்வதற்கு அனுமதிக்கப்படாமல் தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று பணி சார்ந்த ஆணையத்திடம் மில்ஸ் அளித்த புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு சம்பளம் வழங்கப்படும் இவர், வாரத்தில் இரண்டு நாட்களில் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும் நாட்களில், இவர் தன்னுடைய கேபினுக்கு சென்று, கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு மின்னஞ்சலை பார்ப்பாராம். ஆனால் மின்னஞ்சலில் வேலை சம்பந்தப்பட்ட எந்த செய்தி, தகவல், அப்டேட்ஸ் என்று எதுவுமே இருக்காது என்பதையும், தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
செய்தித்தாளை படித்துவிட்டு சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் மின்னஞ்சல் பார்ப்பார் என்றும் அதில் ஏதாவது வேலை சம்பந்தப்பட்டது ஏதாவது இருந்தால் அதற்கு பதிலளித்து விட்டு, செய்தித்தாள் படிப்பாராம். மறுபடியும் மதிய உணவு சாப்பிட்டு கொஞ்சம் நடை பயிற்சி செய்து, அலுவலகம் வந்து வேற எந்த வேலையும் இல்லாமலிருந்தால் வீட்டுக்கு சென்று விடுவதாக கூறி இருக்கிறார்.
மில்ஸ் தொடுத்த வழக்கு ஃபிப்ரவரி மாதம் விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.