வருடம்தோறும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். எப்போதுமே உடலால் வலிமைமிக்க ஆண்களை விட மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே.
அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம்.
வரலாறு:
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று பிரெஞ்சுப் புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் போர்க்கொடி தூக்கினர். அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே பிரதானமாக இருந்தது. பல்வேறு கலவரங்களுக்கு மத்தியில் பெண்ணுரிமை போராட்டம் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இறுதியில் பிரான்சில் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று பெண்கள் அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. பின்னாளில் மகளிருக்கென சிறப்பு தினம் அனுசரிக்க எண்ணிய போது இந்த நாளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் உள்ள தடைகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு புகழ் வெளிச்சத்திற்கு வந்த ஏராளமான சாதனை பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை பற்றி தற்போது பார்க்கலாம்.
கல்பனா சாவ்லா: (Kalpana Chawla)
100 அடி உயரம் என்றாலே பயப்படுவோர் இருக்க அனாயசமாக விண்வெளியில் பயணம் மேற்கொண்டு தங்கியவர் கல்பனா சாவ்லா. ஹரியானாவில் பிறந்த கல்பனா சாவ்லா, நாசாவுடன் விண்வெளி பயணத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி ஆவார். விண்வெளி விண்கலமான 'கொலம்பியா'வில் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பிரைமரி ரோபோட்டிக் ஆர்ம் ஆபரேட்டராக பறந்தார்.
எனினும் 2003-ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறியதில் அதிலிருந்த மற்ற 6 பேருடன் இவரும் விண்ணில் கலந்து விட்டார். கல்பனா சாவ்லா இறந்து 18 ஆண்டுகள் ஆணாலும் கூட இன்றளவும் விண்வெளித்துறையில் சாதிக்க நினைக்கும் ஏராளமான இளம் பெண்களுக்கு முன்னோடியாக உள்ளார்.
மலாலா யூசுப்சாய்: (Malala Yousafzai)
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த இளம்பெண் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பல இளம் சிறுமிகளின் குரலாக ஒலித்து வருகிறார். 2012-ல் தாலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார். உயிர் பிழைத்து மீண்டு வந்த போதும் பெண்ணுரிமை தொடர்பான தனது இலக்கில் குறியாக இருந்தார். தொடர்ந்து தன் நிலத்தில் வாழும் பெண்களுக்கு தேவையான அதிகாரம் மற்றும் கல்வி மனித உரிமைகளுக்காக போராடினார். அமைதிக்கான நோபல் பரிசை குழந்தை உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தியுடன் 2014-ம் ஆண்டில் பகிர்ந்து கொண்டார்.
ரிது கரிதால்: (Ritu Karidhal)
'இந்தியாவின் ராக்கெட் பெண்' என்றழைக்கப்படும் இஸ்ரோவில் பணியாற்றும் ரிது கரிதால், லக்னோவைச் சேர்ந்த விண்வெளி பொறியியலாளர் ஆவார். இந்தியாவின் செவ்வாய் கிரக சுற்றுப்பாதை திட்டமான 'மங்கல்யானுக்கு' முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் இவர் சந்திரயன் 2 திட்டத்திற்கான இயக்குநராகவும் இருந்தார்.
Also read... 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - ஐசிஐசிஐ வங்கியின் புதிய அறிவிப்பு!
கமலா ஹாரிஸ்: (Kamala Harris)
சமீப காலமாக நாம் அதிகம் உச்சரிக்கும் பெயராக உள்ளது கமலா ஹாரிஸ். இந்திய-ஜமைக்கா பெற்றோருக்கு பிறந்த இவர் அமெரிக்காவின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த பதவியான துணை அதிபர் பதவியில் இருக்கும் முதல் அமெரிக்க பெண்மணியாவார். மேற்கொண்டவர்கள் மட்டுமல்ல இன்னும் ஏராளம் ஏராளமான பெண்கள் உலகம் முழுவதும் சாதனை படைத்தது வருகின்றனர்.
அடிமைத்தனத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தால் வேரூன்றி வரும் பெண்கள் மார்ச் 8 மட்டுமல்ல, ஆண்டின் அனைத்து நாட்களிலும் போற்றி பாராட்டப்பட வேண்டியவர்கள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.