• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஜூலை 30 உலக நண்பர்கள் நாளாக மாறியது எப்படி? இதோ பின்னணி

ஜூலை 30 உலக நண்பர்கள் நாளாக மாறியது எப்படி? இதோ பின்னணி

1935 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவில் உலக நண்பர்கள் தினம் தோன்றியதாக கூறப்படுகிறது.

  • Share this:
’உன்னைப் பற்றிக் கூறு உன் நண்பனைப் பற்றி கூறுகிறேன்’ என்கிறது பழமொழி. திரையிசையில் கடந்த 20 ஆண்டுகளாக நண்பர்களின் மேன்மை கூறும் பாடலாக ’முஸ்தப்பா, முஸ்தஸ்பா’ பாடல் உள்ளது. அந்தப் பாடலில் வரும் ‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான்’ என்ற வரி நண்பர்களின் தேவையையும், மேன்மையையும் காட்டுகிறது. உலகம் இப்போது மிகப்பெரும் இக்கட்டான சூழலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா என்ற கொடிய வைரஸ் பலரது வாழ்விலும் பெரும் சோகத்தையும், இருளையும் நிரப்பிச் சென்றுள்ளது.

பொருளாதார அளவிலும் மக்கள் பெரும் பின்னடைவை சந்தித்து சொல்லொண்ணா துயரில் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் சக மனிதனாக அன்பும் ஆதரவையும் கொடுத்து, சகோதரத்துவத்தை பேண வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரின் கடமை. கிராமம், ஊர், மாநிலம், நாடு என எல்லைகளற்ற பரப்பை கொண்டுள்ளது நட்பு மட்டுமே. மொழி தெரியாமல் இருந்தால் கூட, உணர்வுக்கு ஆதரவுக் கரம் நீட்டி துணை நிற்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நம்முடைய நண்பர்களே. உறவுகள் கைக்கொடுக்காத நேரத்தில் கூட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் கூட நிற்பார்கள்.

அவர்கள் உடன் இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை அளவை அளவிட முடியாது. தவிர்க்க முடியாத தருணங்களில் ஏற்படும் சோகத்திலும் பங்கெடுக்கும் அத்தகைய தூய நட்புகளை கவுரவிக்கும் நாள் தான் உலக நண்பர்கள் தினம். ஆனால், ஜூலை 30 ஆம் தேதியில் உலக நண்பர்கள் தினம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுவதில்லை. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாட்களில் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் ஜூலை 30 ஆம் தேதி உலக நண்பர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்வோம்.

உலக நண்பர்கள் தினம் வரலாறு

1935 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவில் உலக நண்பர்கள் தினம் தோன்றியதாக கூறப்படுகிறது. வாழ்த்து அட்டைகளை உருவாக்கிய ஜோய்ஸ் ஹால் என்பவர் நண்பர்கள் தினத்தை உருவாக்கி, அந்த நாளில் தங்களுடைய தோழர்களுக்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்து பரிமாறிக் கொள்ளும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். பின்நாளில், நண்பர்கள் தினத்தின் பின்னணியில் வாழ்த்து அட்டைகளின் வணிக நோக்கம் இருப்பதை உணர்ந்து, அந்த நாளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவது கைவிடப்பட்டது. இதன்பின்னர், ஜூலை 27, 2011 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை உலக நண்பர்கள் தினமாக ஜூலை 30 ஆம் தேதியை அறிவித்தது.

இருப்பினும், இந்த நாளில் நண்பர்கள் தினத்தை இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கொண்டாடுவதில்லை. நேபாள் இந்த நாளில் உலக நண்பர்கள் நாளை கடைபிடிக்கிறது. பெர்லின், ஓஹியோ நகரங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தின முக்கியத்துவம்

இந்த உலகத்தில் பல விதமான வேற்றுமைகள் இருக்கின்றன. பாலினம், மதம், சாதி, நிறம் என வெவ்வேறு அளவீடுகளில் பிரிந்திருக்கும் மனித சமூகம் நட்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகிறது. இது மனித சமூகத்துக்கு தேவையான ஒன்றாகவும் இருப்பதால், இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் நட்பு, சமூகத்தில் இருக்கும் அனைத்துவிதமான வேற்றுமைகளையும் களைவதற்கான துருப்புச் சீட்டாகவும் இருக்கிறது. இரு நபருக்கு இடையிலான பரஸ்பர அன்பை பேணுவது முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பேணுவது வரை என நட்பு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால், மற்ற முக்கியமான நாட்களைவிட நண்பர்கள் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: