திருமணத்திற்கு பெண்ணோ, மாப்பிள்ளையோ தேவை என்றால் முன்பெல்லாம் அக்கம் பக்கத்திலும், சொந்த பந்தங்களிடமும் சொல்லிவைத்து தேடுவார்கள். கல்யாணம், காதுகுத்து என எந்த விசேஷத்திற்கு சென்றாலும் அங்கே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் படலம் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைனில் வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். சாதி, மதம், எலைட், நார்மல் என வகை வகையாக வரன் தேடும் இணையதளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
இப்படி பல வழிகள் இருக்க லண்டனில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் பெண் தேடி, இணையத்தில் வைரலாகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸின் சென்ட்ரல் பகுதி மற்றும் பேக்கர்லூ லைனில் தன்னை கணவனாக அடைவதற்கு யாராவது தயாரா? என கேள்வி எழுப்பும் விதத்தில் பிரம்மாண்டமான விளம்பர பலகைகளை வைத்துள்ளார்.
மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் 31 வயதான அவர், இந்த விளம்பரத்திற்காக மட்டும் 2 ஆயிரம் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளாராம். கோட் சூட்டில் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படத்துடன் ‘உங்களுக்கு ஏற்ற சிறந்த இந்தியர்’ என்ற தலைப்பையும் கொடுத்துள்ளார். ‘Find Jeevan a wife’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு வாரமாக லண்டனின் பிரதான பகுதிகளில் இவர் விளம்பரப்படுத்தி வருகிறார். மேலும் பெண் தேடும் படலத்திற்காகவே 'findJEEVANa wife.com' என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.
Also Read : ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்
அந்த வெப்சைட்டின் முகப்பு பக்கத்தில், "கோவிட் என்பதால், உங்களை வெளியே தேடுவது கடினமாக உள்ளது. செயலிகளின் பயன்பாடுகளும் குறைந்து வருகின்றன. எண்ணற்ற குறுஞ்செய்தி மற்றும் ஸ்வைப் செய்வதை விட நேரில் சந்திப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டிய சமயம் இது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஜீவனின் இந்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்கவும் ஆரம்பித்திருக்கிறது. இதுவரை 50 பெண்கள் அவரிடம் விண்ணப்பித்துள்ளார்களாம். அதில் இருந்து தனக்கு பொருத்தமான பெண்களை முடிவு செய்து, அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.
தனக்கான காதலை தேட விளம்பர பலகையை பயன்படுத்திய முதல் நபர் ஜீவன் கிடையாது. கடந்த ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்கான துணையை தேர்ந்தெடுக்க பிரம்மாண்ட விளம்பர பலகைகளை வைத்தது சோசியல் மீடியாவில் வைரலானது. 66 வயதான ஜிம் பேஸ் என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெக்சாஸுக்கு குடிபெயர்ந்தார், பின்னர் வாஷிங்டனில் இருந்து தனது வணிகத்தை டெக்சாஸில் தொடங்க விரும்பிய அவர், தனக்கான அன்பான துணையையும் வேண்டும் என முடிவெடுத்து, விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.