இந்தியாவில் ரயில்வே துறையை மிகவும் நவீனமயமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முழுமையான மின்மய ரயில் பாதை தொடங்கி, சொகுசான மற்றும் பாதுகாப்பான அதே நேரம் மிக விரைவான பயணம் பயணிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ரயில்வே துறையில் பல்வேறு நவீன வசதிகளை செய்து வருகிறது.
அந்த வரிசையில் ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான் வந்தே பாரத் ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், சொகுசான இருக்கைகள், மிக விரைவான, பாதுகாப்பான பயணம் என வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள் ஏராளம். அப்படி பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஒன்றின் உட்புறக் காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவானிஷ் ஷரன் என்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது வந்தே பாரத் ரயிலின் ஊட்பறக் காட்சி. அதில் ரயில் பெட்டி முழுவதும், ஏராளமான குப்பைகள் சிதறிக் கிடந்தன. உணவு சாப்பிட்ட காலிப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என ரயில் பெட்டி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அருகில் துப்புறவு தொழிலாளி ஒருவர் கையில் துடைப்பத்துடன் நிற்கிறார். இதுதான் நாம் என்கிற ரீதியில் அவானிஷ் we the people என கேப்சனும் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள். உங்கள் மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்திருக்கும் அளவிற்கு கடமைகளை அறிந்திருக்கவில்லை என ஒருவர் கலாய்த்திருக்கிறார். நமக்கு நல்ல உட்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று கேட்கிறோம் ஆனால் அப்படி கிடைக்கும் வசதிகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோமா?... என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் நமது பொறுப்பை உணரவில்லை என்றால் ஒன்றும் மாறப்போவதில்லை என மற்றொருவர் புத்திமதி சொல்லியிருக்கிறார். நாம் நமது அடிப்படை நாகரீக அறிவை வளர்த்துக்கொள்ளாத வரை நமக்கு வளர்ச்சி என்பது இல்லை என்றிருக்கிறார் ஒருவர்.
அண்மையில் செகந்திரபாத் - விசாகப்பட்டிணம் வந்தே பாரத் ரயிலில் குப்பைகள் நிறைந்து கிடந்ததை பார்த்து பயணிகளுக்கு ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது ரயில்வே நிர்வாகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bullet Train, Garbage, Twitter