கொரோனா நோயாளிகளுக்கு தினமும் வீட்டு உணவு- நெகிழ வைக்கும் சேவை!

இதுவரை சுமார் 1 லட்சம்  உணவுகளை ஏழைகளுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கியுள்ளதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 1 லட்சம்  உணவுகளை ஏழைகளுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கியுள்ளதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுக்கு இது பெரும் சவாலானதாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன.

மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் செயல்படாது. பால், குடிநீர் போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். மற்ற பணிகள் எதுவும் நடைபெறாது என்பதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். குறிப்பாக தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை என்பது அவர்களது கருத்தாக உள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கை தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லை என்று பலரது கருத்தாக உள்ளது.

சாலையோரங்களில் வசிப்போர், ஆதரவற்றோர் ஆகியோரின் நிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் யாசகம் பெற்றுதான் தங்கள் வாழ்நாளை கழித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரடங்கில் அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பலரும் அவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற சேவைகளை செய்து வருகின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த என்ஜிஓ ஒன்று தினமும் சுமார் 259 கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை  வழங்கி வருகிறது. ஆஷ்ரி சொசைட்டி என்ற அமைப்பு ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் தினமும் இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறது. தற்போது ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதித்தவர்களுக்கும் உணவு வழங்கி வருகிறது.

ஆஷ்ரி சொசைட்டி என்ற அமைப்பின் தலைவர் கன்டுலா ராம் கிஷோர் ரெட்டி இதுகுறித்து தெரிவித்ததாவது,  ‘ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் இலவசமாக உணவு வழங்குவது எங்கள் அமைப்பின் நோக்கம். நாங்கள் முதலில் இந்த சேவையை துவங்கியபோது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு உணவு வழங்கினோம். தற்போது 259 கொரோனா நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிறைய தினக்கூலிகள் வேலையிழந்துள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால் நாங்கள் ஏழை மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தோம். நாங்கள் ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு இலவச உணவு வழங்கி வருகிறோம். மேலும் தினசரி வீட்டில் சமைத்த உணவுகளை 600 ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதுவரை சுமார் 1 லட்சம்  உணவுகளை நாங்கள் ஏழைகளுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கியுள்ளோம்.

சத்தான உணவுகளை ஏழை மக்களுக்கு வழங்கலாம் என எனது மருத்துவ நண்பரின் ஆலோசனையின் பேரில் நானும் எனது மனைவியும் வீட்டில் சமைத்த உணவுகளை வழங்க முன்வந்தோம்’ என்றார்.

கிஷோர் அவரது மனைவி இருவரும் தங்கள் சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து இந்த உணவுகளை வழங்கி வருகின்றனர். இதுவரை சுமார் ரூ. 21 லட்சம் வரை செலவழித்துள்ளனர். இவர்கள் இதுவரை யாரிடமும் நன்கொடையை கேட்கவில்லை எனினும் நிறைய பேர் தாங்களாக முன்வந்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் மக்கள் தாமாக முன்வந்து உதவிகளை செய்ய வேண்டும் என கிஷோர் கேட்டுக்கொண்டார்.
Published by:Archana R
First published: