பசியின் உச்சம்.. கிச்சன் சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - வைரல் வீடியோ

வீடியோ காட்சி

தாய்லாந்தில் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்த யானை ஒன்று சமயலறை சுவற்றை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்த உணவை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
வனப்பகுதியில் இருக்கும் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமான ஒன்று. வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், காய்கறிகள், வாழைகளை சாப்பிடும். ஆனால், தாய்லாந்தில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்கு சென்ற யானை, வீட்டின் சுவற்றை உடைத்துக் கொண்டு சமயலறையில் புகுந்து, அங்கிருக்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிட்டுள்ளது. இதனையறிந்த வீட்டினர் அதிர்ச்சியடைந்ததுடன், யானை வீட்டிற்குள் புகுந்ததை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

தெற்கு தாய்லாந்தில் சாலர்ம்கியாட்பட்டனா என்ற கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த கிராமத்துக்கு அருகாமையில் கெங் கிராச்சன் தேசிய பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் இருக்கும் யானைகள் அடிக்கடி உணவு தேடி அந்த கிராமத்துக்கு வருவது வழக்கம். அண்மையில், வனப்பகுதியில் இருந்து வந்த யானை நேராக ராட்சடவன் புவெங்பிரசொப்பன் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளது. மோப்ப சக்தி அதிகம் இருப்பதால், அதன் வாசனையை முகர்ந்த யானை நேரடியாக சமயலறை சுவற்றை உடைத்தது, அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.வீட்டில் திடீரென எழுந்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த ராட்சடவன், தூக்கத்தில் இருந்து விழித்து சமயலறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, யானையின் தலைப் பகுதி மட்டும் தெரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்த அவர், யானை வீட்டில் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை படம்பிடித்துள்ளார். இது குறித்து பேசிய தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள், ராட்சடவன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானையின் பெயர் பூன்சுவே எனக் கூறியுள்ளனர்.

Also Read : ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்னிஃபர் நாய்களுக்காக கல்லறை அமைத்த கேரள போலீஸ்!

கெங் கிராச்சன் தேசிய பூங்காவில் இருக்கும் அந்த யானை இதற்கு முன்பும் பலமுறை அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், உணவுக்காக செல்வது வாடிக்கையான ஒன்று எனக் கூறியுள்ளனர். அந்த கிராமத்தில் சந்தை ஒன்று இருப்பதால் அங்கு உணவுகள் கிடைக்கும் என பூன்சுவே யானைக்கு தெரியும் எனவும், அந்த சந்தைப் பகுதிக்கு அடிக்கடி செல்லும் என விளக்கமளித்துள்ளனர்.யானை வீட்டிற்குள் நுழைந்தது குறித்து பேசிய ராட்சடவன், நடு இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஏதோ ஒன்று இடிந்து விழும் சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.

Also Read : ஆபத்தானதாக மாறும் சிலந்திகள் - வெளியான பகீர் காரணம்!

உடனடியாக தூக்கத்தில் இருந்து விழித்து சத்தம் வரும் பகுதியை நோக்கி ஓடியதாக தெரிவித்துள்ள அவர், சமயலறையில் யானையின் தலை மட்டும் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து இருந்ததாகவும், வீட்டில் யானை புகுந்ததை பின்னர் வீடியோவாக பதிவு செய்ததாக கூறியுள்ளார். வனப்பகுதியை ஒட்டிய கிராமத்துக்குள் யானைகள் புகுவது வாடிக்கை என்றாலும், வீட்டு உணவுகளை யானைகள் தேடுவது புதிதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: