ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் செய்வது தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், போரில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள், அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ரஷியாவின் கனரக ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இரையாக்கப்படும் எனக் கருதி, லட்சக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதே சமயம், வெடிகுண்டு தாக்குதல்களால் உக்ரேன் பற்றி எறியும் நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் உலகை பதற வைப்பதாக உள்ளன.
குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கார் ஒன்று தனியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அருகே சாமானிய மனிதர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார். அடுத்த சில நொடிகளில் குண்டுவெடிப்பில் தாம் இரையாக இருக்கிறோம் என்பதை அவர் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், அங்கு திடீரென பெரும் நெருப்புச் சிதறலுடன் வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் அவர் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் தரையில் விழுந்து விட்டார்.
டிவிட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, உலகெங்கிலும் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வீடியோவை 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் இதர நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்திய தொடர்பான பல்வேறு காட்சிகளை ஒருங்கிணைத்து நெட்டிசன்கள் உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர்.
Also Read : உக்ரைன் பெண்மணியின் கண்ணீர் வீடியோ வைரல்!
போர் குறித்த அச்சம் காரணமாக இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எல்லை தாண்டி, அண்டை நாடான போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரேனின் பல பகுதிகளில் ஊடுருவி வரும் நிலையில், அங்கு இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
Also Read : 9/11 தாக்குதலை கணித்த பாபா வாங்கா புதின் உலகை ஆள்வார் என்றும் கணித்தார் - பகீர் கணிப்பின் பின்னணி
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, உக்ரைன் மீது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் போர் நடத்தி வருகிறார். இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களை, இந்திய அரசு தொடர்ந்து பத்திரமாக மீட்டு வருகிறது. உக்ரைனை விட்டு வெளியேறி ரொமேனியாவில் தங்கியிருந்த 219 இந்தியர்கள் அங்கிருந்து விமானம் மூலமாக மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, உக்ரைன் மக்களை தவிர்த்து, இந்தியர்களை எல்லை தாண்டிச் செல்ல விடாமல் உக்ரைன் அதிகாரிகள் தடுக்கின்றனர் என்று திங்கள்கிழமை காலை டெல்லி திரும்பிய மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.